5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும்.. தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் பதில் மனு

  • சென்னை: தமிழக தேர்தல் முடிவானது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திமுக அதிமுகவை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து 4 மாதங்களை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியலில் தேர்தல் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

    Advertisement

    இதைத்தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். அதேபோல, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தனர். தேர்தல் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதால் அரசுப் பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சனைகள் எழும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப் பேரவை செயலாளர், முதல்வர் விஜய், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் முதல்வர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த மனுவில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொகுதியின் மக்கள் எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கு தடை கோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    A case challenging Chief Minister Vijay’s election victory is set to come before the Madras High Court today, adding to the political buzz in Tamil Nadu.