விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!

  • சென்னை: தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் புதிய அரசு வந்த பின்னரும் இன்னமும் சட்டம் ஒழுங்கு சீராகவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுடனான நெருக்கத்தை அதிகரிக்க, காவல்துறையினர் நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு

    இப்படி இருக்கையில், புதிய அரசு அமைந்தும் கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்னும் சரியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக தவெக ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த 20 நாட்களில் மட்டும் சென்னை, கோவை என முக்கிய நகரங்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருக்கின்றன. சென்னையில் தலைமை காவலரால் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    டிஜிபி உத்தரவு

    குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் ஒருபுறம் இருந்தாலும், குற்றம் நடப்பதற்கான சூழலை குறைத்தால்தான் குற்ற எண்ணிக்கை குறையும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    நிலைமை இப்படி இருக்க, காவல்துறையினருக்கு டிஜிபி மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதாவது காவலர்கள் இனி நடை ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

    சிறப்பு நடவடிக்கை

    இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் தீவிர காவல் நடை ரோந்துப் பணிகள். சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு காவல் பணியை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    நடை ரோந்து

    இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், மாநிலம் முழுவதும் நேரடி கள காவல் பணிகள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஒரே மாதிரியான உயர்தர செயல்திறனுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

    இந்நடவடிக்கைகள் காவல்துறையின் கண்காணிப்பு காவல் பணியை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும், சமூகத்துடனான காவல்துறையின் தொடர்பை வலுப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாட்டை மேலும் திறன்மிக்கதாக மாற்றவும் உதவும்.

    நோக்கம் இதுதான்

    அதன் ஒரு பகுதியாக, காவல் நிலைய அதிகாரி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து காவல் நடை ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    Advertisement

    சமூக விரோதிகள்

    இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பொதுமக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்து எச்சரித்தல் மற்றும் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவை ஆகும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    vijay: A change of government has recently taken place in Tamil Nadu. However, various quarters have criticized the fact that law and order has not yet stabilized following the new administration's arrival. Against this backdrop, DGP Mahesh Kumar Aggarwal has ordered police personnel to conduct foot patrols to foster closer ties with the public.