சென்னையின் உள்கட்டமைப்பு மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு முக்கியமான திட்டமாகப் பார்க்கப்பட்ட சென்னையின் 2வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த இந்த பிரம்மாண்ட விமான நிலையத் திட்டப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட விமான நிலையத்தை 5700 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது 1700 ஏக்கர் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில், புதிய சிப்காட் (SIPCOT) தொழில் பூங்கா ஒன்றை அமைப்பது குறித்து அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் புதிய கொள்கை முடிவுகளும் முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் பெரும் விவாதக் கிளப்பியுள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில், நாள்தோறும் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் சரக்குக் போக்குவரத்தின் (Cargo) அளவும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த விமான நிலையத்தைச் சுற்றிப் பெருநகரக் குடியிருப்புகள் அமைந்துவிட்டதால், எதிர்காலத் தேவைக்கேற்ப ஓடுதளங்களை விரிவாக்கம் செய்ய அங்கு துளியும் இடவசதி இல்லை. இதன் காரணமாகவே, தென்னிந்தியாவின் மிக முக்கிய வர்த்தக மையமாகச் சென்னையைத் தக்க வைக்கவும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலங்கானாவின் தொழில் வளர்ச்சிக்குப் போட்டி கொடுக்கவும், சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. கடந்த திமுக தலைமையிலான அரசு, இதற்காகப் பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் சுமார் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு, அதற்கான நிர்வாக அனுமதியையும் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் வழங்கியிருந்தது. தற்போது செயல்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆண்டுக்குச் சுமார் 3.5 கோடி பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்து வரத்து அதிகரிக்கும் என்பதால், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தற்போதைய விரிவாக்கமும் போதுமானதாக இல்லாமல் கடுமையான நெரிசலைச் சந்திக்கும். 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த அசுர வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன போக்குவரத்து வசதிகள் மிக அவசியமாகும். உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை (MNCs) ஈர்க்க சென்னைக்கு ஒரு பிரம்மாண்டமான புதிய சர்வதேச விமான நிலையம் அடித்தளமாக அமையும். தற்போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் மிகப்பெரிய முதலீட்டில் 2வது விமான நிலையத்தை அமைக்க தயாராகி வருகின்றது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் பெங்களூரு (தேவனஹள்ளி) மற்றும் ஹைதராபாத் (ஷம்ஷாபாத்) ஆகிய நகரங்கள் தங்களது புதிய பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையங்கள் மூலம் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றன. விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏகனாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகத் தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் ஒரு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், டிட்கோ (TIDCO) உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய திட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவாக, பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பரந்துார் சுற்றுப்புறங்களில் சுமார் 20 கிராமங்களை உள்ளடக்கி, 300-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில எடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஒட்டுமொத்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தில் சுமார் 30 சதவீத நிலத்தை, அதாவது 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை, நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாகப் பத்திரப்பதிவு மூலம் பெற்றிருந்தது. தற்போது இந்த விமான நிலையத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே பெறப்பட்ட இந்த 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் வரைபடங்களுடன் புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் இந்த புதிய கொள்கை முடிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு விதமான முக்கியக் கருத்துக்கள் எழுந்துள்ளன. பரந்தூர் பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் சாமானிய எளிய மக்கள், தங்களின் விளைநிலங்களும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கின்றனர். மேலும், மக்கள் வாழும் கிராமங்களை காலி செய்யாமல், அங்கு தொழிற்சாலைகள் மூலம் மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவது நல்ல முடிவு என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், பொருளாதார மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் மத்தியில் இந்த முடிவிற்குச் சில கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஒரு சர்வதேச விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல, அது பல்லாயிரக்கணக்கான கோடி உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட பொருளாதார நுழைவாயிலாகும். விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு, வெறும் தொழில் பூங்காவாக மாற்றினால் சென்னை நகரம் உள்கட்டமைப்பில் பின்னோக்கித் தள்ளப்படும் என்றும், சர்வதேச முதலீடுகளைப் பெறுவதில் அண்டை மாநில நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துடன் போட்டியிடுவது தமிழகத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என்றும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், பரந்தூரை தாண்டி சென்னை சுற்றுவட்ட பகுதியில் ஒரே இடத்தில் 5700 ஏக்கர் நிலம் எங்கு உள்ளது என்பது தான் அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. சென்னையின் 2வது விமான நிலைய திட்டத்தை கைவிடாமல் மாற்று இடத்தை கண்டுபிடித்து செயல்படுவது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய முக்கியமான கேள்வி, 1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?தமிழ்நாடு அரசின் திட்டம்
சென்னைக்கு 2வது விமான நிலையம் ஏன் மிக முக்கியம்?
பயணிகள் எண்ணிக்கை
1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
விஜய் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
பரந்துார் பகுதி
விஜய் அரசின் இந்த முடிவு சரியா?