சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக உருவாகும் கூட்டணி அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் பெண் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்கும் 23 புதிய அமைச்சர்களில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த 7 பட்டியலின அமைச்சர்களில் 6 பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை தமிழக அரசியலில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பட்டியலினத்தை சேர்ந்தவர்களின் தவெக கட்லிஸ்ட் - அமைச்சர் ராஜ்மோகன், அவினாசி எம்எல்ஏ கமலி, ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ், ஓட்டபிடாரம் மதன் ராஜா, அரக்கோணம் காந்திராஜ், ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு ஆகியோர் இடம்பெற உள்ளனர். தமிழக அமைச்சரவையில் சமூக பிரதிநிதித்துவ அதிகரிப்பு காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கூட்டணி அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களவை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தவெக-விற்கு பெரும் பலம் கொடுக்கும். இதேபோல் பெண் பிரதிநிதித்துவத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது. இன்று பதவியேற்கும் 23 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். ஏற்கனவே தொழிற்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கீர்த்தனா பெண் அமைச்சராக இருக்கும் நிலையில், மொத்தம் 4 பெண்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இது தமிழக அரசியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காட்டுகிறது. இதோடு ஒரு முஸ்லீம் பிரதிநிதியும் தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. அறந்தாங்கி எம்எல்ஏவான முகமது பர்வேஸ் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். விரைவில் ஐயூஎம்எல் கட்டியினரினும் பதவியேற்க உள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவை விரிவாக்கம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இந்த விரிவாக்கத்துடன் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில், துறை ஒதுக்கீடுகள் விரைவில் அறிவிக்கப்படும். ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சர்கள் அனைவரும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் ஏற்க உள்ளனர்.