சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அரிதாக நிகழும் ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியவர் முதலமைச்சர் விஜய். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த அவர், வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். ஆனால் இன்று அதே கட்சியின் தலைவராக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார். ஜூன் 22ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்யின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் ஒரு தனி அத்தியாயமாக மாறியுள்ளது.
பொதுவாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடிக்க பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். வலுவான அமைப்பு, மாவட்ட வாரியான நிர்வாகம், அடிமட்ட தொண்டர்கள், மக்கள் ஆதரவு என நீண்டகால உழைப்புக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.
ஆனால் அந்த கணக்கை முறியடித்தது தமிழக வெற்றிக் கழகம். கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது அரசியல் பார்வையாளர்களையே ஆச்சரியப்பட வைத்தது. விஜய்யின் அரசியல் வெற்றி ஒரே நாளில் உருவானது அல்ல என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதன் வேர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருந்தன. நடிகராக உச்சத்தில் இருந்த காலத்திலேயே ரசிகர்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக மாற்றியதே பின்னாளில் அரசியல் அடித்தளமாக அமைந்தது. ரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள், நலத்திட்டங்கள், இயற்கை பேரிடர் கால உதவிகள் போன்ற பணிகள் மூலம் ரசிகர்கள் மக்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தினர். இதற்கிடையில், விஜய்யின் மக்கள் செல்வாக்கும் தொடர்ந்து உயர்ந்தது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இளைஞர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் முகமாகவும் அவர் உருவெடுத்தார். அவரது திரைப்படங்கள் சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை பேசத் தொடங்கியபோது, ரசிகர்கள் மத்தியில் அரசியல் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. 2009ஆம் ஆண்டு ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதுவே பின்னாளில் அரசியல் கட்சியாக மாறும் கட்டமைப்பின் முதல் பெரிய படியாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் கிளைகள் அமைக்கப்பட்டன. மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது, சமூக சேவைகள் செய்வது, பொதுமக்களுடன் நேரடி தொடர்பை வளர்ப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை விஜய் அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இருந்த எதிர்பார்ப்புக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கட்சி தொடங்கிய பிறகு விஜய் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் கவனமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாநில மாநாடுகள், நிர்வாகிகள் சந்திப்பு, இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல், மாவட்ட வாரியான அமைப்பு கட்டமைப்பு என திட்டமிட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநாடுகள் தவெகவின் அரசியல் வலிமையை வெளிப்படுத்தின. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிகள், கட்சி வெறும் ரசிகர் அமைப்பல்ல என்பதை அரசியல் எதிரிகளுக்கே உணர்த்தின. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் களம் இறங்கிய தவெக, மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டது. "உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன்" என்ற விஜய்யின் பிரச்சார வாசகம் பலரின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள், நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் அரசியல் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் மத்தியில் கட்சிக்கு ஆதரவு அதிகரித்தது தேர்தல் முடிவுகள் வெளியானபோது தமிழக அரசியல் வரைபடமே மாறியிருந்தது. பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் 1967, 1977க்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சக்தி ஆட்சியை அமைத்த முக்கிய நிகழ்வாக அது பதிவானது. விஜய்யின் வெற்றி வெறும் இரண்டு ஆண்டுகால அரசியல் உழைப்பின் விளைவு மட்டுமல்ல. ரசிகர் மன்ற காலம் முதல் உருவான வலிமை, நீண்டகால சமூகப் பணிகள், இளைஞர்களிடையே உருவான செல்வாக்கு, மாற்றத்திற்கான மக்களின் விருப்பம் ஆகிய அனைத்தும் சேர்ந்தே இந்த வெற்றியை உருவாக்கியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனால்தான் தவெகவின் வெற்றி என்பது இரண்டு ஆண்டுகளின் கதை அல்ல, பல தசாப்தங்களாக உருவாகி வந்த ஒரு அரசியல் பயணத்தின் உச்சம் என்ற அவரது ஆதரவாளர்கள் பெருமையாக கூறுகின்றனர். இன்று முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய், நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய தனது கேரியரின் உச்சத்தில் நிற்கிறார். இது நிச்சயம் சாதனை தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.தவெக
1990களின் தொடக்கத்தில் விஜய் ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் திரைப்படங்களை கொண்டாடும் அமைப்பாக இருந்த ரசிகர் மன்றங்கள், பின்னர் சமூக சேவைகளிலும் ஈடுபட ஆரம்பித்தன.விஜய் அரசியல்
விஜய் மக்கள் இயக்கம்
தமிழக வெற்றிக் கழகம்
தவெகவின் அரசியல் வலிமை
2026 சட்டப்பேரவைத் தேர்தல்
புதிய அரசியல் சக்தி
மக்களின் விருப்பம்
அரசியல் பயணத்தின் உச்சம்