வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்!

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக அவர் தலைநகர் டெல்லி செல்ல உள்ள நிலையில், இந்த பயணம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே 27-ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றார் முதல்வர் விஜய். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசியிருந்தார்.

    Advertisement

    குறிப்பாக தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் முன்வைத்ததாக கூறப்பட்டது.

    விஜய்

    அதே பயணத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்தின் நிதி தேவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளானது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் விஜய் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அத்தகைய சந்திப்பு நடைபெறாமல் அவர் சென்னை திரும்பியிருந்தார்.

    Advertisement

    டெல்லி பயணம்

    இந்நிலையில், ஜூன் 11-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் மீண்டும் தலைநகர் செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், முதலீட்டு வாய்ப்புகள், மத்திய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி தொடர்பான முக்கிய விவாதங்கள் இந்த கூட்டத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நிதி ஆயோக் கூட்டம்

    தமிழகத்திற்கு கூடுதல் நிதி பெறுவது, முக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முதல்வர் விஜய் இந்த கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
    அதே நேரத்தில், இந்த டெல்லி பயணத்தின் அரசியல் முக்கியத்துவமும் அதிகமாக பேசப்படுகிறது. சமீப காலமாக தேசிய அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    அமித் ஷா

    இந்த நிலையில், டெல்லி பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில - மத்திய அரசு உறவுகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களையும் விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் தற்போது காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நெருக்கமான உறவு நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    Advertisement

    காங்கிரஸ் தலைவர்கள்

    குறிப்பாக வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தல், தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நிலை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டங்கள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் டெல்லி பயணத்தின் போது மட்டுமே தெரியவரும் என கூறப்படுகிறது.

    தமிழக அரசியல்

    ஆட்சிப் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜயின் பயணம் தமிழக அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒருபுறம் மாநில வளர்ச்சிக்கான நிதி மற்றும் திட்டங்கள், மறுபுறம் தேசிய அரசியல் தொடர்புகள் என இரட்டை முக்கியத்துவம் கொண்ட இந்த பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

    English Summary

    Tamil Nadu CM Vijay to attend NITI Aayog meeting; meetings with national leaders likely.