தொட விட மாட்டோம்.. தொட்டவங்களையும் விட மாட்டோம்! 2 நாளில் ஆக்‌ஷன்.. வேலுவுக்கு வேட்டு வைத்த விஜய்!


  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய், தமிழக சட்டசபையில் பேசியபோது முந்தைய ஆட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் எனவும், மக்கள் பணத்தை தொட்டவர்களை விட மாட்டோம் என பேசியிருந்தார். அவர் பேசி இரண்டே நாட்களில், முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அதிரடி ரெய்டு (சோதனை) நடத்த உத்தரவிட்டுள்ளார். உத்தண்டி - திருவான்மியூர் மேம்பாலம் அமைப்பதில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை அடுத்து, காலையிலேயே இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    தமிழகத்தின் முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லம், திருவண்ணாமலையில் உள்ள சொத்துகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எவ வேலு

    இந்த சோதனைக்கும் காரணமாக உத்தண்டி - திருவான்மியூர் மேம்பாலத் திட்டத்தில் நடந்ததாக கூறப்படும் டெண்டர் முறைகேடு புகார் தான் என கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சாலை மற்றும் மேம்பாலப் பணிகளில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    லஞ்ச ஒழிப்புத்துறை

    இதில் முன்னாள் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் திட்டங்களுடன் தொடர்புடைய சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நான்கு இடங்களில் சாலைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையிலும், பணிகள் நிறைவு பெற்றதாக காட்டி கட்டணங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எ.வ.வேலு, கண்ணன், பூபாலன், பெரியசாமி, சத்தியபாமா உள்ளிட்டோர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    செந்தில் பாலாஜி

    இந்த சோதனை சென்னை மற்றும் திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல், கரூரிலும் நடைபெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கியவராக கூறப்படும் அரசு ஒப்பந்ததாரர் சங்கரின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால், இந்த வழக்கின் மூலம் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் குறித்த விரிவான விசாரணை நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் தொடர்பாக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். "மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலும் வெளிச்சத்திற்கு வரும்" என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுவது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    திமுக

    திமுகவில் முக்கிய தலைவராகவும், தற்போது சட்டசபை கொறடாவாகவும் இருக்கும் எ.வ.வேலுவுக்கு எதிராக சோதனை நடைபெறுவது அந்தக் கட்சியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முக்கிய துறைகளை கையாண்ட அமைச்சர்களில் ஒருவராக அவர் இருந்தார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் விஜய்க்கு எதிராக பேசியவர்களில் எவ வேலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தவெக

    எவ வேலு மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே என் நேரு ஆகியோருக்கு எதிரான வழக்குகளும் தூசு தட்டப்பட்டு அடுத்தடுத்து விசாரணைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆளும் கட்சிக்கு நெருக்கடியாக பேசி வரும் அமைச்சர்களை குறி வைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

    English Summary

    DVAC raids at EV Velu-linked locations spark fresh political debate after Vijay's anti-corruption remarks in Assembly.