செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் சீருடையின்றி மப்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் இரு வேட்பாளர்களுக்கும் களத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் அனைத்தையும் மாற்றும் என்று தவெகவினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் இரு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்படி இன்று மதுராந்தகம் தொகுதியில் தவெக கூட்டம் நடக்க இருக்கிறது. மொத்தமாக 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விஜய் வருகையையொட்டி தவெக கூட்டம் நடக்கும் இடத்தில் அதிகளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தவெக கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களான நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கரூர் சம்பவம் போல் எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்பதால், இப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் காவல்துறை இன்ஃபார்மர்ஸ் களமிறக்கப்பட்டுள்ளனர். மறுபக்கம் சீருடை இல்லாமல் மப்டியிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் கூட்டத்தில் யார் எந்த தகிடுதத்தில் ஈடுபட்டாலும், உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சியின் போது ஸ்டாலின் மதுராந்தகம் தொகுதிக்குள் வரவில்லை. முன்னதாக கலைஞர் கருணாநிதி மட்டுமே இந்த தொகுதிக்கு நேரடியாக வந்திருக்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது வந்திருக்கிறார். தற்போது முதல்வர் விஜய் முதல்முறையாக மதுராந்தகம் வருகிறார். இதனால் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.