ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை.. புறக்கணித்த இடதுசாரிகள்

  • சென்னை: த.வெ.க. தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக சென்னை கோவளத்தில், முதல்வர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்று நடக்கவுள்ள தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற இடைத் தேர்தல்களை கூட்டணி கட்சிகள் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த முக்கிய ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. . இதில் ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், கட்சிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றன. ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளன

    Advertisement

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு முன் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று அறிவித்து அழைத்தது. ஆனால் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போதே, அன்றே முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறியது. முதல் ஆளாக கூட்டணியை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் த.வெ.க. கூட்டணியில் இணைந்தன. இறுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் இணைந்தது.

    அதே நேரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து பலர் இணைந்து வருவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், எந்த கூட்டணி கட்சியும் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை..இது ஒருபுறம் எனில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் ம.தி.மு.க.வும் த.வெ.க. கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறது. திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் இப்போது தவெக கூட்டணியில் உள்ளன.

    Advertisement

    இதனால் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில் பேசும்போது, தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று சொல்லி வருகிறார். இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தங்கள் கூட்டணிக்கு நல்ல ஒரு பெயரை சூட்டி, தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி, 5 ஆண்டுகள் ஆட்சியை இடையூறு இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் விஜய் விரும்புகிறார்.

    இதற்காக சென்னை அடுத்த கோவளத்தில் அமைந்துள்ள 'பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் முதல்வரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் ஆதரவு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது. இது ஆட்சி அமைந்தபின் த.வெ.க. தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.

    Advertisement

    இந்த கூட்டத்தில், அரசு அமைவதற்கும், ஆட்சி செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழமை கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் விஜய் தனது நன்றியை நேரில் தெரிவிக்கிறார். த.வெ.க. தலைமையில் மாநிலத்தில் ஒரு வலுவான, முறையான மதச்சார்பற்ற கூட்டணியை அதிகாரப்பூர்வமாக கட்டமைப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு கூட்டணிக்கான பெயர் சூட்டும் விழாவும் நடக்க உள்ளது . அதற்காக 'மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி', 'தமிழ்நாடு முற்போக்கு சமூகநீதி கூட்டணி' என்ற பெயர்களும் பரிசீலனையில் இருக்கிறதாம்.

    இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
    மேலும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    Advertisement

    இந்த கூட்டத்தில், கூட்டணிக்கு என தனியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதோடு பொதுவான வழிகாட்டுதல் குழுவும் உருவாக்கப்பட இருக்கிறதாம். இது தவிர, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற இடைத் தேர்தல்களை கூட்டணி கட்சிகள் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடக்க உள்ளது. மேலும், காவிரி விவகாரம், மேகதாது அணை பிரச்சனை, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட மாநில உரிமைகள் சார்ந்த முக்கிய பிரச்சனைகளில் கூட்டணி கட்சிகளின் கருத்தையும் கலந்து ஆலோசித்து ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்க உள்ளார்களாம்.. இது தவிர கூட்டணி கட்சிகளின் விருப்பங்கள் என்னென்ன இருக்கிறது, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் என்னவென்றும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

    Advertisement

    இந்த சூழலில் கம்யூனிஸ்டுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், 'கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஆட்சியில் இருப்பவர்களின் கூட்டமாகவே அது நடைபெறுகிறது. நாங்கள் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருகிறோம். எனவே, அந்த கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வது பொருத்தமாக இருக்காது என்று கூறிவிட்டோம். அதற்கு பதிலாக இன்று காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளோம்' என்றார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், 'த.வெ.க. இன்னும் ஒரு கூட்டணியாக இல்லை. எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையிலும் இல்லை. எனவே, அந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஆனால், வெளியில் இருந்து மட்டுமே ஆதரிக்கிறோம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேச உள்ளோம்' என்றார்.

    English Summary

    A meeting of TVK's alliance partners is taking place today in Kovalam, Chennai; Chief Minister Vijay is holding consultations today with parties supporting the government, including the Congress, VCK, and the Muslim League. The Marxist and Indian Communist parties boycotted this meeting.