மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?

  • சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் 11-ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் கடந்த மாதம் 10 ஆம் தேதி பொறுப்பேற்றார். மாநில முதல்வர்கள் பதவியேற்றதும் டெல்லியில் பிரதமரை சந்திப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்ற விஜய், பிரதமர் மோடியை சந்தித்தார். வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் முன்வைத்தார்.

    Advertisement

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய் சந்தித்து, நிதி சார்ந்த கோரிக்கைகளை வைத்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விஜய் தரப்பில் இருந்து சந்திக்க நேரம் கேட்கப்பட்ட போதிலும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேபோல, கூட்டணி கட்சியான காங்கிரஸின் முக்கிய தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையும் சந்திக்காமல் தமிழ்நாடு திரும்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

    இந்த சூழலில்தான், தமிழக முதல்வர் விஜய் வரும் 11 ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். மாநில முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.

    Advertisement

    அந்த வகையில், நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வருகிற 11-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய், வருகிற 11-ம் தேதி டெல்லி செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அமித்ஷாவையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    கடந்த முறை விஜய் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கியிருந்த போதும், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் திரும்பினார். கூட்டணி கட்சியின் தலைவர்களை விஜய் புறக்கணிக்கிறாரா? அல்லது காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க விரும்பவில்லையா? என விவாதப்பொருளான நிலையில், 11 ஆம் தேதி பயணத்தில் விஜய்யின் திட்டம் என்ன என்பது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    அதேபோல், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த பயணத்தின் போது விஜய் திறந்து வைப்பார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியும் ரத்து ஆனது. எனவே, 11 ஆம் தேதி பயணத்தின் போது திருவள்ளுவர் சிலையை திறந்து வைப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Vijay is expected to visit Delhi on June 11 to attend the NITI Aayog meeting. During the trip, he is also likely to hold discussions with Union Home Minister Amit Shah and senior Congress leaders.