ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.. முக்கிய பிரச்சனையை கையில் எடுத்த விஜய்! பிரதமர் மோடிக்கு கடிதம்

  • சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த சட்ட திருத்தம் ஏழை குடும்பங்களுக்கு சென்றடையும் உணவு தானிய அளவை கணிசமாக குறைக்கும் எனவும், சட்ட திருத்தத்தால் 70 லட்சம் ஏழை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

    Advertisement

    தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    அந்தியோதயா அன்ன யோஜனா

    ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இச்சட்ட வரைவு, 2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் மூலமாகத் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்கிறது.

    Advertisement

    தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது.

    தினக்கூலித் தொழிலாளர்கள்

    பல்வேறு உள்-வகைப்பாடுகளுக்கிடையே நிலவும் தேவைகளுக்கேற்ப சமத்துவமின்மையைக் களைவதும், ஊட்டச்சத்துத் உணவுப் பொருள் உரிமைகளை மிகச் சரியாக ஒழுங்குபடுத்துவதுமே இத்திருத்தத்தின் நோக்கம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குச் சென்றடையும் உணவு தானியங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 69.26,983 ஏழைப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் இக்குடும்பங்கள், ஒன்றிய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள தகுதி வழிகாட்டுதல்களின்படி, சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து விதவைகள். குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள், வயதான மாற்றுத்திறனாளிகள். உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு நிலையான வருமானம் இல்லாத அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் தலைமையில் செயல்படும் குடும்பங்கள், பழங்குடியினக் குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

    தென்னிந்திய மாநிலங்களை தண்டிப்பதாக அமையும்

    மேலும், உறுதி அளிக்கப்பட்ட, நிபந்தனையற்ற உரிமைகளின் மூலம் இத்தகைய நலிவடைந்த குடும்பங்களைப் பாதுகாப்பதற்காகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மிக வறுமையில் வாடும் ஏழை மக்களின் இறுதிச் சட்டப் பாதுகாப்பிற்கான ஒரு நடவடிக்கையாகவே நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

    Advertisement

    குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு குடும்பத்திற்கும் போதிய அளவில் உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடவோ அல்லது பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே, இதன் உரிமைகள் திட்டமிட்டே எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன.

    இத்தகைய உரிமையை, தலா ஒரு நபருக்கான பங்காக மாற்றி, குடும்ப அளவில் அதற்கு உச்சவரம்பு விதிப்பது, குறைந்த எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலங்களை, குறிப்பாக, ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay Writes to PM Modi: Chief Minister Vijay has urged Prime Minister Narendra Modi to reconsider the proposed Food Security Act amendment, warning that it could reduce food grain benefits for poor families and affect nearly 70 lakh people.