தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்?

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமாகா மாநில பொதுச்செயலாளர் யுவராஜா ஆகியோர் அடுத்த வாரத்தில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக இந்த தரப்பும் புஸ்ஸி ஆனந்திடம் பேசி இருக்கும் சூழலில், அடுத்த வாரத்தில் இணைப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான நிர்வாகிகள் இடமாற்றம் மற்றும் கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. அண்மையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ஆளுங்கட்சியான தவெகவை நோக்கி பல முக்கியத் தலைவர்கள் நகரத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இதன் உச்சகட்டமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியுமான விஜயபாஸ்கர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் யுவராஜா ஆகிய இருவரும் அடுத்த வாரத்தில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயல்பாடுகளில் கடந்த சில வாரங்களாகவே விஜயபாஸ்கர் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார். அதேபோல், தமாகா இளைஞரணித் தலைவராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்த யுவராஜாவும் மாற்றுப் பாதையை ஆலோசித்து வந்தார். இந்த இரு தலைவர்களும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ரகசியமாகத் தொடர்புகொண்டுள்ளனர்.

    Advertisement

    அப்போது தவெகவில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாகப் பேசி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபரங்கள் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரிடமிருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தவெக தலைமையின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால், அடுத்த வாரத்தில் சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த மாபெரும் இணைப்பு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் இவர்களின் ஆதரவாளர்களும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் பெருமளவில் தவெகவில் இணையவுள்ளனர்.

    டெல்டா மண்டலத்தில் மிக வலுவான மக்கள் செல்வாக்கும், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அசாத்திய திறமையும் கொண்டவர் விஜயபாஸ்கர். இவரின் வருகை தவெகவிற்குப் பெரும் பலமாக மாறி இருக்கிறது. ஆனால் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு தவெகவுக்கு எதிர்காலத்தில் சிக்கலாக அமையும் என்றும் தவெகவினர் விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    பிற கட்சிகளில் இருக்கும் செல்வாக்கான நபர்களை தவெக பக்கம் இழுப்பதன் மூலம் முதல்வர் விஜய், தவெக-வின் அடித்தளத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அசைக்க முடியாத அளவிற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் தவெகவை நோக்கி இன்னும் அதிகளவில் நிர்வாகிகள் வருவார்கள் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijayabaskar: Ex-AIADMK Minister C Vijayabaskar and TMC's Yuvaraja Set to Join CM Vijay’s TVK Next Week