200 பேருந்துகள், 600 கார்கள்.. அதிரப்போகும் ஈசிஆர்.. இணைப்பு விழாவுக்கு தயாராகும் விஜயபாஸ்கர்!

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய இரு விஜயபாஸ்கரும் நாளை மறுநாள் தவெகவில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஈசிஆரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் இதற்கான ஏற்பாடுகளை சி.விஜயபாஸ்கர் தரப்பில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அன்றைய தினம் 200 பேருந்துகள், 600 கார்களில் தன் ஆதரவாளர்களை அழைத்து வரவிருக்கிறார் விஜயபாஸ்கர். ஈசிஆரில் பேரணியாக வந்து முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைய திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விராலிமலை விஜயபாஸ்கரும், கரூர் விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. நாளை மறுநாள் ஈசிஆர் பகுதியில் உள்ள ஒரு கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இணைப்பு விழாவில் இரு விஜயபாஸ்கரும் தவெகவில் ஐக்கியமாக இருக்கின்றனர். இதற்காக ஏற்கனவே சி.விஜயபாஸ்கர் தரப்பு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    Advertisement

    இந்த இரு விஜயபாஸ்கர் தரப்பு மீது ஊழல் புகார் இருப்பதால், இவர்களை இணைக்க தவெகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்டதால், தவெகவை அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் எதிர்ப்பு குரல்களுக்கு முதல்வர் விஜய் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    அதற்கேற்ப இரு விஜயபாஸ்கரும் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு தயார் செய்து வருகின்றனர். நாளை மறுநாள் ஈசிஆர் அருகே இருக்கும் கன்வென்ஷன் சென்டரில் இந்த இணைப்பு விழா நடக்கவுள்ளது. சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமின்றி புதுக்கோட்டை தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஐக்கியமாக உள்ளனர்.

    Advertisement

    ஈசிஆர் கன்வென்ஷன் சென்டரில் இணைப்பு விழாவுக்கான பணிகளை விஜயபாஸ்கரின் ஆதரவாளர் கருப்பையா தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த இணைப்பு விழாவுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணியை நடத்த விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். 200 பேருந்துகள், 600 கார்களில் புதுக்கோட்டை மாவட்ட ஒட்டுமொத்த அதிமுகவினரையும் சென்னைக்கு அழைத்து வர தயாராகி வருகின்றனர்.

    இதன்பின் ஈசிஆரில் பேரணியாக சென்று முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருக்கிறார். விழாவுக்கு அழைத்து வரப்படும் தொண்டர்களுக்கான சைவ, அசைவ உணவுகள் தயார் செய்யும் பணிகள் நடக்கவிருக்கின்றன. கட்சியில் இணைவதற்கு முன்பாகவே விஜயபாஸ்கரின் இந்த அதிரடியான நகர்வுகளால் தவெகவின் மற்ற நிர்வாகிகளும் கொஞ்சம் ஆடிப் போயுள்ளனர்.

    English Summary

    Vijayabaskar: Former AIADMK Leaders C Vijayabaskar and MR Vijayabaskar to Coordinate Massive ECR Rally to Join TVK on July 2nd