விஜய் முன்னிலையில் தான் இணைவேன்.. கறார் காட்டும் விஜயபாஸ்கர்.. தள்ளிப்போகும் இணைப்பு விழா!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் விஜய் முன்னிலையில் தான் தவெகவில் இணைவேன் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதனால் ஜூன் 29ஆம் தேதி நடக்கவிருந்த இணைப்பு விழா, ஜூலை 2ஆம் தேதிக்கு தள்ளப் போடப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடுகள் நடக்கவிருப்பதால், விஜயபாஸ்கர் இணைப்பில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணையப் போவது உறுதியாகிவிட்டது. எனினும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இணையாமல், "தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் தான் நான் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைவேன்" என்பதில் அவர் மிகவும் தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்த பிரம்மாண்ட இணைப்பை அவர் விரும்புகிறார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமாகினர். இவர்கள் இதுநாள் வரை முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை.

    அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பலரும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று புலம்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தவெகவில் இணைந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அறிவித்தார். இதனால் விஜயபாஸ்கர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைய விரும்பவில்லை.

    Advertisement

    இதுதொடர்பாகவே 2 நாட்களுக்கு முன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து விஜயபாஸ்கர் பேசி இருந்தார். அவரின் ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் என்று ஏராளமானோர் கட்சியில் இணைவதால், விஜய் முன்னிலையில் இணைப்பு விழா நடக்க வேண்டும் என்பதில் விஜயபாஸ்கர் கறாராக இருக்கிறார்.

    இதற்காக ஜூன் 29ஆம் தேதி இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஜூன் 29ஆம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் இணைப்பு விழாவை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 29ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடக்கவுள்ளது. இதனால் விஜய் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் ஜூலை 2ஆம் தேதியன்று விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி மாமல்லபுரத்தில் தவெகவின் வழக்கமான தனியார் விடுதியில் இந்த விழாவை நடத்தலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    English Summary

    Vijayabaskar: Vijayabaskar Adamant on Joining TVK in CM Vijay’s Presence; Joining Ceremony Postponed to July 2