“கரூருக்கு விஜய் தாமதமாக சென்றதுதான் உயிர் பலிக்கு காரணம்”.. இன்றைய பேச்சுக்கு TKS இளங்கோவன் பதிலடி

  • சென்னை: "கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம். பலரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது திமுக அரசு. வெயில், தாகத்தால் 100 பேர் மயங்கினர். 60 பேர் உயிரை காப்பாற்றியது திமுக அரசு" என திமுக செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கரூரில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேசியுள்ளது தற்போது விவாதங்களை கிளப்பியுள்ளது.

    Advertisement

    கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தற்போது பேசியுள்ள முதல்வர் விஜய், எதிர்பார்த்ததை விடவும் கூட்டம் அதிகமாக உள்ளது என எங்களை கரூர் போலீசார் அலர்ட் செய்திருக்கலாம். அவர்கள் நினைத்திருந்தால் பரப்புரை கூட்டத்தையே ரத்து செய்திருக்கலாம். ஆனால் காவல்துறையினரே எங்களை ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தனர். அன்றைக்கு கரூர் போலீசை நம்பிவிட்டேன். அதன் பின்னணியில் இப்படியெல்லாம் ஒரு நாடகம் உள்ளது என்று எனக்கு தெரியாது என தெரிவித்தார்.

    திமுக அரசின் காவல்துறை சதி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார் விஜய். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், "கரூர் விவகாரத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். மற்றபடி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.

    காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இது அரைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.

    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.கவினர் எந்த உதவியும் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்ற திமுக அரசு செயலாற்றிக் கொண்டிருந்தபோது, விஜய் சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். மக்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துகூட தவெக நிர்வாகிகள் கவலைப்படவில்லை. இதனையெல்லாம் திசைதிருப்பும் வேலையைத்தான் விஜய் செய்து வருகிறார்.

    Advertisement

    கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று சென்னைக்கு ஓடிவந்த விஜய், இன்று தான் கரூர் செல்கிறார். மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைக்கூட பார்க்கவில்லை. ஆனால், இன்று நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்.

    சட்டமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் பேசினால், எதிர்க்கட்சிகள் கேள்விதான் கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை என்றால் வெளிநடப்பு செய்வார்கள். இது சட்டமன்ற மரபே தவிர, எதிர்க்கட்சிகள் ஓடவில்லை. பார்ட்டி ஃபண்ட் பற்றி பேசுகிறீர்களே, தற்போது நடைபெறும் குதிரை பேரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று பேசத் தயாரா?

    அதிமுகவை தீர்ந்த சக்தி என்று கூறும் விஜய், அந்தக் கட்சியில் இருப்பவர்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பது ஏன்? கர்நாடகாவில் உள்ள கோவிலுக்குச் சென்றவர், அங்குள்ள முதலமைச்சரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேசாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    "Vijay's late arrival in Karur was the cause of the fatalities. DMK government saved lives by admitting many people to the hospital. Hundred people fainted due to the heat and dehydration; the DMK government saved the lives of 60 of them," stated DMK Leader TKS Elangovan.