சென்னை: ஜெம் வீரமணியின் மீதான போக்சோ வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் இதைப்பற்றி ஏன் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இன்று மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் விஜய். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேசியிருந்தார்.
"தமிழகத்தில் இளம்பெண்களையும், சிறுமிகளையும் பல ஆண்டுகளாக ஒரு நபர் சீரழித்து வந்துள்ளார். இந்த விவகாரம் முந்தைய திமுக ஆட்சியின்போதே புகாராக வெளிவந்த போதிலும், ஒட்டுமொத்த வழக்கும் அதன் ஹிஸ்டரியும் அப்படியே அமைதியாக மூடி மறைக்கப்பட்டது. இதற்கு பின்னால் திமுகவுக்குள் அப்படி என்ன டீலிங் நடந்தது ஐயா? இத்தனை ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை தவெக அரசு அமைந்த பிறகுதான் தோண்டி எடுத்து, குற்றவாளியை கைது செய்தது சிறையில் அடைத்துள்ளோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார், இப்போது வாயை திறந்து பேசுங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களும் இந்த விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறார்கள்? பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசும் தலைவர்கள், இத்தனை ஆண்டுகள் சிறுமிகள் சீரழிக்கப்பட்போது எங்கு போயிருந்தார்கள்? இந்த விவகாரத்தில் திமுகவும் பேசவில்லை, அதிமுகவும் பேசவில்லை. இரு திராவிட கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே அப்படி என்ன ரகசிய உடன்பாடும் கூட்டும் நிலவுகிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், ஒரு முதல்வராக விசாரணையில் இருக்கும் போக்சோ வழக்கை வெளியில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக பேசுவது என்பது சரி கிடையாது என பல்வேறு தரப்பினரும் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, மூத்த பத்திரிகையாளர் ஷியாம் இது குறித்து பேசியிருப்பதாவது, "ஜெம் வீரமணி வழக்கு விசாரணைக்கு வந்தபோது.. வெளியில் யாரும் இதைப்பற்றி பேசக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வு குழு மட்டுமே இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.. அதுவும் கூட, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தை கையில் எடுப்பது என்பது மிகப்பெரிய அட்ராசிட்டி. இதை அவர் செய்திருக்க கூடாது. இந்த விஷயம் நீதிமன்றத்திற்கும் போகும்.. நீதிமன்றமும் கண்டனம் தெரிவிக்கும். தமிழகத்தின் அரசியல் சூழல் என்ன? விஜய் ஆட்சிக்கு வந்திருப்பது ஏதோ பெரிய அதிருப்தி அலை மாதிரியெல்லாம் தெரியவில்லை. விஜய் பிரச்சாரம் செய்த பல மாவட்டங்களில் தவெக வெற்றிப்பெறவில்லை. 108 தொகுதிகளில்தான் ஜெயித்திருக்கிறார். ஏதொ ஒரு அதிருப்தி இருந்திருக்கிறது.. அதன் வடிகாலகத்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இடைத்தேர்தலிலும் அதே நிலைமைதான் உள்ளது" என்று கூறியிருக்கிறார்.