உதயநிதி வந்தால் வன்னியரசை பேச வையுங்கள்.. சட்டசபையில் விஜய் களமிறக்கும் புதிய வியூகம்!

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் வகுத்துள்ள புதிய அரசியல் வியூகம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கடுமையான கேள்விகள் மற்றும் தாக்குதல்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசுவை ஒரு 'டிரம்ப கார்ட்' ஆகப் பயன்படுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அரசியல் ஆளுமையும் கள அனுபவமும்

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும், தற்போது தவெக கூட்டணியில் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, ஊடக விவாதங்களிலும் பொது மேடைகளிலும் திமுகவின் விமர்சனங்களை எதிர்கொள்வதில் முன்னிலையில் இருக்கிறார். விஜய்க்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து பதிலும் தருகிறார்.

    சட்டப்பேரவை நடவடிக்கைகளில் தவெக அரசை திமுக கடுமையாகத் தாக்க முற்படும்போதெல்லாம், வன்னியரசுவை முன்னிறுத்திப் பதில் அளிக்க வைப்பதுதான் தவெகவின் முதன்மைத் திட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கிய கேள்விகளுக்கு வன்னியரசு மூலமாகவே பதிலடி கொடுக்கும்போது, திமுகவின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் என்பது தவெக வியூக வகுப்பாளர்களின் கணக்கு.

    Advertisement

    உதயநிதிக்கு எதிரான உளவியல் வியூகம்

    இந்த வியூகத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் நுட்பம் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கம் முதல்வர் விஜய் நேரடியாகப் பதிலளிக்காமல், தனது அமைச்சர் வன்னியரசுவைப் பதிலளிக்க வைப்பதன் மூலம், "விஜய் உதயநிதிக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறார்" என்ற பிம்பத்தை உருவாக்க தவெக விரும்புகிறது.

    அரசியல் ரீதியாக உதயநிதிக்கு நேரடிப் போட்டியாளராகத் தன்னை வரித்துக்கொள்ளாமல், அவரைவிட ஒருபடி மேலே இருக்கும் தலைவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளவே விஜய் இந்த மூவை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அமைச்சர்களே போதும்.. முதல்வர் நேரடியாகக் களமிறங்க வேண்டிய அவசியமில்லை" என்ற செய்தியை எடுத்துச் செல்வதே இதன் முக்கிய நோக்கம்.

    Advertisement

    திமுகவின் தாக்குதலும் வன்னியரசுவின் எதிர்தாக்குதலும்

    ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்ற விவகாரத்தில், திமுக தலைவர்கள் வன்னியரசுவையும் விசிகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்குப் பதிலளிக்கும் வகையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக அதிகாரத்தில் பங்கு பெறுவது சமூக நீதியின் அடுத்த கட்டம் என்றும், தவெக அரசு பெரியார், அம்பேத்கர் வழியில் நடக்கும் அரசு என்றும் வன்னியரசு தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.

    தற்போது வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக தொடுக்கும் கணைகளைத் தடுத்து நிறுத்தும் அரசியல் கேடயமாக வன்னியரசு செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

    முதல்வர் விஜய்யின் இந்த முடிவு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், திமுகவின் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளையும் வன்னியரசு எந்த அளவுக்குத் திறம்பட எதிர்கொள்கிறார் என்பதில்தான் இந்த வியூகத்தின் வெற்றி அடங்கியுள்ளது.

    Advertisement

    எது எப்படியோ, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

    English Summary

    Vijay's safe guard Against Udhayanidhi Stalin: Is Vanni Arasu getting fielded?