சாத்தான் சத்தியம் பேசுவது போல.. எடப்பாடி பழனிச்சாமி மீது தவெக கடும் விமர்சனம்

  • சென்னை: "கட்சியையே ஆட்சி அதிகாரப் பசிக்காக அடகு வைத்து, கைகளாலும் கால்களாலும் நடந்து தவழ்ந்து, பதவியை ருசித்தவர்கள், மனசாட்சி உள்ள மக்களாட்சிக்குப் பாடம் எடுப்பது, 'சாத்தான் சத்தியம் பேசுவது போல' இருக்கிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவெக ஐடி விங்க் கடுமையாக விமர்சித்துள்ளது.

    Advertisement

    தவெக ஐடி விங்க் மேலும் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "மக்கள் தீர்ப்பை ஏற்க இயலாமல், இரவோடு இரவாக இருட்டிலே மறைந்து மறைந்து பதுங்கிப் பதுங்கிச் சென்று பேசி, திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயன்று தோற்றவர்கள், தூய அரசியல் பற்றிப் பேசுவது 'குற்றவாளியே தீர்ப்பு எழுதுவது போல' இருக்கிறது.

    Advertisement

    சத்தியவான் இடர்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடுமா தமிழகம்? அப்படி இருக்கையில், எந்தக் குற்றம் என்றாலும் உடனடி நடவடிக்கையைத் துரிதப்படுத்தும், மக்கள் விரும்பும் ஆட்சி மீது களங்கம் சுமத்துவது, 'ரத்தக் கறை படிந்த பற்களை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு சிரிப்பது போல' இருக்கிறது.

    திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தீர்ந்துபோன சக்தி திருந்தும் வரையிலும் சொல்லுவோம். சினிமா வெற்றி பற்றியோ, சினிமா வெளிச்சம் பற்றியோ, சினிமா புகழ் பற்றியோ இழிவாகப் பேசும்போது, புரட்சித் தலைவரையும் ஜெயலலிதா அம்மையாரையும் தீர்ந்துபோன சக்தி வேண்டுமென்றே இழிவுபடுத்துவது போலத்தான் இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. இது, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களே ஆழமாக உணர்ந்த ஒன்று. இடர்பாடிக்குப் புரியும் வகையில், பழமொழியாகச் சொல்ல வேண்டும் எனில் இது, 'மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல' இருக்கிறது.

    Advertisement

    லஞ்சமற்ற, ஊழலற்ற, நேரடியாக மக்களுடன் மக்களாகக் களமிறங்கிக் களமாடும், மக்கள் விரும்பும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரை, விஷக் காளான்கள் எல்லாம் விமர்சிப்பதை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தக்க பதிலடியைச் சரியான தருணத்தில் தமிழக மக்களே தருவார்கள் என்பதை இடர்பாடி என்றும் மறந்துவிட வேண்டாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்ன நடந்தது

    முன்னதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த பதிவில், "சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த அரசின் அமைச்சர்களான சிலர் போய் அந்தக் குடும்பத்தினரை விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றிருக்கிறார்கள். அமைச்சர்கள் தருவதாகச் சொன்ன நிவாரண நிதியையும், உதவியையும் பெற மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன. இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவரது உறவினர்களும் நீதிகேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள். விலை மதிப்பற்ற உயிர்களுக்கு - உயிரே உன் விலை என்ன? என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுண்டர்களும், குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற செயல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவைகளையெல்லாம் விரைவில் தடுத்துவிடுவோம் என்று அமைச்சர்களை விட்டு சொல்ல வைப்பது, 'குதிரைகள் ஓடிய பின்னால், லாயத்தை பூட்டுவதற்கு' சமமான ஒன்றாகும்.

    கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை என்பதை, த.வெ.க. முதலமைச்சர் உணர வேண்டும். மாற்றத்தை வேண்டி தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்களுக்கு, மாற்றத்தைத் தராவிட்டாலும், ஏமாற்றத்தைத் தராத வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.

    English Summary

    Vijay's Tvk IT wing attacks AIADMK leader edappadi palanisamy over jail issue