சென்னை: இடைதேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் 2 முறை இந்த தொகுதிக்கு வருவதை விமர்சித்துள்ள திமுக வேட்பாளர் பரந்தாமன், தோல்வி பயம்தான் இதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
ஒன் இந்தியா செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பரந்தாமன் கூறியதாவது, "இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் பணப்பெட்டி என்று மக்களை கூறுகிறார்கள். நாங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்பதற்கு முன்னரே அவர்கள் உண்மையான விஷயத்தை தெரிவித்து விடுகிறார்கள்.
மரகதம் குமரவேல் பெட்டி வாங்கிக்கொண்டு கட்சி மாறிவிட்டார்கள் என்று தொகுதி மக்களே குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை இரண்டாம் இடத்திற்கு போட்டியிடுவதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு சொந்த கட்சியிலே வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. மற்ற கட்சிகளிலிருந்து வேட்பாளரை அழைத்து வந்து இங்கு போட்டியிட வைக்கிறார்கள். கடந்த தேர்தலின் போது எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது தவெகவுடன் இருப்பதால், அவர்களுக்கு பலம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். இன்று தவெக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் தனித்து வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். அதுதான் பலவீனமான கூட்டணி" என்று கூறியிருக்கிறார். 5 முனை போட்டி நிலவுகிறது, வாக்குகள் பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது இது யாருக்கு சாதகமாக இருக்கும்? நிச்சயமாக திமுகவுக்கு தான் சாதகமாக இருக்கும். திமுகதான் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவும், திமுகவும், கம்யூனிஸ்டுகளும் தவெகவுக்கு எதிராக களத்தில் இருக்கிறார்கள். எனவே தவெகவுக்கு ஆதரவான வாக்குகள் பிரியும். அது எங்களுக்கு பலமானதாக மாறும். சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம், 107 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால், சட்டமன்றத்தில் 126 இடங்களுக்கான பெரும்பான்மையை நிரூபித்தது. இதற்கு காரணம் அதிமுகவின் ஆதரவு தான். அந்த வகையில் இன்று மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுபவரும் முன்னாள் தவெக நிர்வாகி தான். எனவே அவரை வெற்றி பெற செய்தால்.. அவர் நாளை பின்னே ஆளும் கட்சியில் சேர்ந்து விட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எனவேதான் இந்த நம்பகத்தன்மை இல்லாததால் தான் திமுகவை மக்கள் ஏற்பார்கள் என்று சொல்கிறேன். மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள 2 முறை முதலமைச்சர் வந்திருக்கிறார். பொதுவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர்கள் போக மாட்டார்கள். ஆனால் இந்த நடைமுறையை விஜய் மீறியிருக்கிறார். மதுராந்தகத்திற்கு முதல்வர் இரண்டு முறை வருகிறார் என்றால் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்" என்று பரந்தாமன் கூறியிருக்கிறார்.