அதிமுகவில் இருந்து திமுக வந்தவர்.. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்! யார் இவர்? பின்னணி

  • சென்னை: முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் யார்?, அரசியலில் அவர் கடந்து வந்த பாதைகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம். அதிமுகவில் எம்.எல்.ஏவாக 2011 தேர்தலில் சட்டமன்றத்திற்குள் நுழைந்த மார்க்கண்டேயன் பேரவைக்குள் பெரும் களேபரத்தையே 2016 இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் உருவாக்கியிருந்தார்.

    Advertisement

    கோவில்பட்டியில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசி சர்ச்சையில் சிக்கினார். இது குறித்த புகாரின் பேரில் மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement


    சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல

    இதையடுத்து, நேற்று இரவு தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார். முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏவின் பின்னணி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    அதிமுகவில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு விளாத்திகுளம் சட்டமன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஜிவி மார்க்கண்டேயன். பட்டதாரியான மார்க்கண்டேயன் ஆக்ரோஷமாக பேசக்கூடியவர். ஜிவி மார்க்கண்டேயன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த மார்க்கண்டேயன், அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் குறித்தும் சட்டமன்றத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

    Advertisement

    அவையில் கடும் அமளி

    மார்க்கண்டேயனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தினார். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது நடைபெற்ற அவையில் ஏற்பட்ட அமளி அப்போது பெரிதும் பேசுபொருளானது.

    2016 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் மார்க்கண்டேயனுக்கு போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 2019ல் விளாத்திகுளம் தொகுதியில் இடைத்தேதல் நடைபெற்றது. இதிலும் மார்க்கண்டேயனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியின் மீது அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் 2020 ல் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    Advertisement

    2021ல் திமுக சார்பில் போட்டியிட்ட ஜிவி மார்க்கண்டேயன் மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். 2026 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போடியிட்ட மார்க்கண்டேயன் 58,395 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் காசிராம் 50,167 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சத்யா 48,879 வாக்குகளும் பெற்றனர்.

    ஜிவி மார்க்கண்டேயன் பேசியது என்ன?

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், சட்டமன்றத்தில் திமுகவினர் வெளிநடப்பு செய்வதை தடுக்கும் வகையில், இனி சட்டசபையை பூட்டி விட்டுத்தான் பேச வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறுகிறார்.

    Advertisement

    சட்டமன்றத்தை பூட்டினால் அவரது எலும்புகளை உடைப்போம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தவெகவினர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கினை போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து, குற்றவியல் சட்டப்பிரிவு 351(3), கொலை மிரட்டல், 352 - அவதூறாக பேசுதல், 352 (2) மக்களிடையே பகை வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    English Summary

    Who is Markandeyan, the DMK MLA for the Vilathikulam constituency? Let us look at the details of his political journey. Markandeyan, who entered the Legislative Assembly as an AIADMK MLA following the 2011 elections, caused a major commotion within the House during the 2016 interim budget session.