சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று காலை போலீசார் கைது செய்யப்பட்ட போது, தன்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி வேண்டும்.. அவரிடம் அனுமதி வாங்கினீர்களா என்று கேள்வி எழுப்பியபடி இருந்தார். இதனால் சபாநாயகரிடம் அனுமதி வாங்காமல் கைது செய்ய முடியுமா என்று பலரும் சந்தேகங்களை எழுப்பினார்கள். இதுபற்றி சட்டமன்ற அதிகாரிகள் வட்டாரங்கள் அளித்துள்ள விளக்கத்தில், பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவரைக் கைது செய்ய, சட்டமன்ற சபாநாயகர் அல்லது சட்டமன்றச் செயலகத்தின் அனுமதி தேவையில்லை என்று தெளிவுப்படுத்தினார்கள்.
கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக கைதாகும் முன்பு, தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தன்னைக் கைது செய்வதற்கு முன் போலீஸார் சபாநாயகரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சட்டமன்ற அதிகாரிகள் கூறும் போது, ஒரு எம்எல்ஏவைக் கைது செய்வதற்குச் சபாநாயகரிடமோ அல்லது சட்டமன்றச் செயலகத்திடமோ போலீஸாரோ அல்லது எந்தவொரு சட்ட அமலாக்க அமைப்போ முன் அனுமதி பெற வேண்டிய சட்டப்பூர்வத் தேவை ஏதுமில்லை என்று கூறினார்கள். எனினும், ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்பு அதுகுறித்த தகவலைச் சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டமன்ற அதிகாரிகள் கூறினர். அதன்படி, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் சட்டமன்றச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்கள். சட்டமன்றச் செயலகம் இத்தகவலை அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அஞ்சல் வழித் தகவல் மூலம் தெரிவித்துள்ளது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 30 நாட்களுக்குள் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில் திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார். பொதுவாக ஒரு எம்எல்ஏவை குற்ற வழக்கு அல்லது அவதூறு வழக்கில் கைது செய்ய சட்டசபை சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை என்றாலும், இந்த விதி சட்டசபைக்குள் அல்லது சட்டசபை வளாகத்திற்குள் பொருந்தாது. சட்டசபை வளாகத்திற்குள் எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம் ஆகும். அவரிடம் அனுமதி வாங்காமல் சட்டசபையில் ஒரு எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்புவதோ அல்லது கைதோ செய்யவே முடியாது.