சென்னையில் பிரபல நிறுவனம் மூடல்.. ‘விவேக்ஸ்' ஷோரூம்களுக்கு நேர்ந்த கதி! கைப்பற்றிய வசந்த் அன்கோ!

  • சென்னை: சென்னையில் கடந்த 60 ஆண்டுகளாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் பிரபலமாக செயல்பட்டு வந்த 'விவேக்ஸ்' (Viveks) ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஷோரூம் செயல்பட்டு வந்த 3 இடங்கள் மற்றும் ஒரு குடோன் உள்ளிட்டவற்றை அதன் போட்டி நிறுவனமான வசந்த் அன் கோ கைப்பற்றி உள்ளது. மிகவும் பிரபலமான இந்த 'விவேக்ஸ்' ஷோரூம் மூடப்பட்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    சென்னையில் ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை சில்லறை விலையில் விற்பனை செய்யும் ஷோரூம்கள் உள்ளன. அதில் முக்கியமானது தான் 'விவேக்ஸ்'. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மக்களின் நம்பிக்கையை பெற்ற ஷோரூமாக 'விவேக்ஸ்' விளங்கி வருகிறது.

    Advertisement

    சென்னையில் மயிலாப்பூர், தி நகர், புரசைவாக்கம் உள்பட பல இடங்களில் 'விவேக்ஸ்' ஷோரூம்கள் உள்ளன. சென்னை மக்களின் நன்மதிப்பை பெற்ற இந்த நிறுவனம் தற்போது சிக்கலில் சிக்கி மூடுவிழா கண்டுள்ளது.

    அதாவது சென்னையில் உள்ள அனைத்து 'விவேக்ஸ்' ஷோரூம்களும் திடீரென்று மூடப்பட்டுள்ளன. சென்னையில் விவேக்ஸ் நிறுவனத்திற்கு புரசைவாக்கம், தி நகர், வேளச்சேரி, மைலாப்பூர், நங்கநல்லூர், சேலையூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் ஷோரூம்கள் உள்ளன. இவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதில் புரசைவாக்கம், தி நகர் வேளச்சேரி, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஷோரூம்கள் விவேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளன. இதனால் மற்றபடி நங்கநல்லூர், சேலையூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவேக்ஸ் ஷோரூம்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன.

    Advertisement

    இந்நிலையில் தான் இந்த 3 வாடகை கட்டடங்களை 'விவேக்ஸ்'ஸின் போட்டி நிறுவனமான வசந்த் அன் கோ கைப்பற்றி உள்ளது. அதேபோல் விருகம்பாக்கத்தில் உள்ள 15 ஆயிரம்சதுர அடி குடோனையும் வசந்த் அன்கோ வாங்கி உள்ளது. இதன்மூலம் சென்னையில் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையில் கடந்த 60 ஆண்டுகளாக கோலோச்சி வந்த 'விவேக்ஸ்' அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்பது பற்றி 'விவேக்ஸ்' நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ''1965ம் ஆண்டு முதல் சென்னையின் சில்லறை வர்த்தகத்தில் 'விவேக்ஸ்' முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்தது. நன்கு யோசித்த பிறகு தான் இப்போது சில்லறை வர்த்தகம் மற்றும் இணையவழி வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகைளும் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய ஆர்டர்கள் எதுவும் நிலுவையில் இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்த முடிவு என்பது எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக எங்களுடன் இணைந்து செயல்பட்ட வாடிக்கையாளர்களுக்கும், பார்ட்னர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

    இந்த 'விவேக்ஸ்' நிறுவனம் பிஏ லட்சுமி நாராயண செட்டியால் கடந்த 1965ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அவர் மறைவுக்கு பிறகு சகோதரர் பிஏ கோதண்டராமன் செட்டி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று செயல்பட்டார்
    தற்போது இந்த 'விவேக்ஸ்' நிறுவனத்தை 3 தரப்பினர் நிர்வகித்து வரும் நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் 'விவேக்ஸ்' நிறுவனம் மூடப்படுவதாக ஆங்கில நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த விவேக்ஸ் நிறுவனம் 1965ம் ஆண்டு சென்னையில் உள்ள மயிலாப்பூர் சமஸ்கிரு கல்லூரிக்கு அருகே தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியது. பிறகு 1969ல் புரசைவாக்கத்தில் 2வது விற்பனை நிலையத்தையும், 1980ல் தி நகரில் 3வது விற்பனை நிலையத்தையும் தொடங்கியது. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து சென்னை மக்களின் நன்மதிப்பை பெற்றது.

    இந்த 60 ஆண்டுகாலத்தில் விவேக்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் பல்வேறு புது முயற்சிகளை மேற்கொண்டது. ஏழை மக்கள் ரூ.1 செலுத்தி பொருட்களை வாங்கி கொண்டு பிறகு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியையும் 'விவேக்ஸ்' ஷோரூம் ஏற்படுத்தி கொடுத்திருந்தது. குறிப்பாக சென்னை திநகரில் 'விவேக்ஸ்' உள்ள கடையில் எப்போதும் அதிகமான கூட்டம் இருக்கும்.

    Advertisement

    இதற்கு முக்கிய காரணம் விவேக்ஸ் நிறுவனத்தில் அனைத்து சர்வதேச பிராண்டுகளைசேர்ந்த வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்யப்படுவது தான். பண்டிகை காலங்களில் சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது கூட்டம் அதிகரிக்கும். திந கரில் உள்ள கடைக்கு வெளியே வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்ற நிலையில் தற்போது அந்த நிறுவனம் மூடுவிழா கண்டுள்ளது.

    English Summary

    'Viveks' showrooms, which had been a popular name in the home appliance retail business in Chennai for the past 60 years, have closed down. A rival company, Vasanth & Co., has acquired three of the locations where these showrooms operated, as well as a warehouse. Speculative details have emerged regarding the reasons behind the closure of the highly popular 'Viveks' showrooms.