சென்னை: இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமான 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகரை மதுரையில் வைத்து சென்னை கீழ்பாக்கம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். யூடியூபர் ஒருவரை மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் திவாகர். இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பாடல் ஒன்றில் அவர் தனது கையில் 'தர்பூசணி' பழத்தை வைத்து கொண்டு தனக்கு சல்யூட் அடிப்போரை அங்கிருந்து செல்லும்படி கூறுவார். அந்த சீனை வேடிக்கையாக நடித்து பிரபலமானவர் தான் இந்த திவாகர். தமிழ் 'பிக்பாஸ் -9' சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு யூடியூப் சேனல்களுக்கு திவாகர் பேட்டியளித்து வருவதையும், இன்ஸ்டாகிராமில் வேடிக்கையாக வீடியோ பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து வரும் திவாகர், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் சமீப காலமாக 'வாட்டர்மெலன் ஸ்டார்' சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கி விட்டதாக போலீசில் புகாரளித்தார். அதன்பிறகு தனியார் யூடியூப் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சனையில் திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. திவாகர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், ''காவல்துறை முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ளது. பணமா? ஜனமா? என்றால் ஜனம் என்று சொல்கிறீர்கள். சென்னையில் கீழ்பாக்கம் ஜி3 காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கர் என்னை பிடித்து வைத்து அடித்து புகார் அளித்த கடிதத்தையே அழித்துள்ளார்கள். எதிர்தரப்பை சேர்ந்த யூடியூப் சேனல் ஓணர் பெரிய பணக்காரர். அவரிடம் 10 அட்வகேட் உள்ளனர். அவரை மீறி ஜெயிக்க முடியாது. புகாரை வாபஸ் வாங்கு என்று என்னிடம் கூறினார். குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும், புகாரை வாங்க மறுத்தது ஒரு தவறை மறைக்க பல தவறை காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் செய்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப் சேனலை சேர்ந்த கார்த்திக் என்பவர் வீடியோவை டெலிட் செய்யும்படி திவாகரிடம் கூறியுள்ளார். அதற்கு திவாகர் அவரிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கார்த்திக் சார்பில் மீண்டும் திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். திவாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இன்று மதுரை சென்று திவாகரை கைது செய்து சென்னை அழைத்து செல்கின்றனர்.