சென்னை: "நீங்க வந்தும் கூட எங்களுக்கு திருப்தியே இல்ல சார்.. போலீசை விட்டு அடிக்க விடுறீங்க.. இப்ப வந்த எம்.எல்.ஏக்களுக்கு கார், பங்களா, காசு கொடுக்குறீங்க.. நாங்க 15 வருசமா வேலை செஞ்சுட்டு இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணுமே இல்ல. நாங்க யார் கிட்ட போய் சொல்றது?" என தூய்மைப் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படவில்லை. முதலமைச்சர் உடனடியாக தங்களை அழைத்துப் பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை குறளகத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக வர முயன்ற 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய ஒத்துழைக்க மறுத்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், "நீங்க வந்தும் கூட எங்களுக்கு திருப்தியே இல்ல சார்.. போலீஸை விட்டு அடிக்க விடுறீங்க.. எங்களுக்கு எப்போ இரக்கம் காட்டுவீங்க.. இப்ப வந்த எம்.எல்.ஏக்கு கார், பங்களா, காசு என எல்லாம் கொடுக்குறீங்க.. நாங்க 15 வருசமா வேலை செஞ்சுட்டு இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணுமே இல்ல. நாங்க வாழ்றதா சாகுறதான்னே தெரியல.. நாங்க யார் கிட்ட போய் சொல்றது?" என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.