எங்களுக்கும் கார் வேண்டாம்.. அதற்கு பதில் நெல் கொள்முதல் நிலையம் கட்டி கொடுங்க - சவுமியா அன்புமணி

  • சென்னை: ''பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை எல்லோரிடமும் வாகனங்கள் உள்ளது. இதனால் நாங்கள் வாகனம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு பதில் எங்களின் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் புதிதாக கார் வழங்கப்படும். காருக்கு மாதாந்திர பராமரிப்பு செலவாக ரூ.75 லட்சமும், அலுவலக உதவியாளர் படியாக மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

    Advertisement

    தமிழக அரசு கடனில் உள்ளதாக கூறிவிட்டு எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கி அதற்கான பராமரிப்பு செலவு, உதவியாளர் படிக்காக மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை வழங்குவதா? என்று கேள்வி எழுந்துள்ளது. இது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். தமிழகத்தின் கடன் இன்னும் அதிகமாக உயரும் என்று பெரும்பாலானவர்கள் கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே தான் திமுக தரப்பில் தங்களின் எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் பாமக எம்எல்ஏக்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதனை பாமகவின் சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி உறுதி செய்துள்ளார்.

    Advertisement

    இன்று சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ''நிதிச்சுமையில் தமிழகம் இருக்கும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு வாகனம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வாங்க தயாராக இருக்கிறீர்களா? இல்லை வேண்டாம் என்று இருக்கிறீர்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சவுமியா அன்புமணி, ''அது சட்டமன்ற உறுப்பினரின் விருப்பம் தான். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை எல்லோரிடமும் வாகனங்கள் உள்ளது. இதனால் நாங்கள் வாகனம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் எங்களுக்கான வாகனம் வாங்குவதற்கான சட்டமன்ற உறுப்பினர் நிதி இருந்தால் எங்களின் தொகுதியில் நெல் கொள்முதல் குடோன் கட்டி கொடுங்க என்று கேட்கலாம் என்று இருக்கிறோம்'' என்றார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் பாமகவிற்கு மொத்தம் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். தர்மபுரி எம்எல்ஏவாக சவுமியா அன்புமணி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி எம்எல்ஏவாக கணேஷ் குமார், விக்கிரவாண்டி எம்எல்ஏவாக சிவக்குமார், ஜெயங்கொண்டம் எம்எல்ஏவாக வைத்திலிங்கம் ஆகியோர் உள்ளனர். இவர்களில் தற்போது சவுமியா அன்புமணி தான் பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது அறிப்பின்படி பாமக எம்எல்ஏக்கள் அரசிடம் இருந்து கார் வாங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    PMK MLA Soumya Anbumani says, "As far as the PMK is concerned, everyone already has vehicles. Therefore, both of us-Soumya Anbumani and Ganesh Kumar (the PMK MLA for the Gingee constituency)-have decided not to accept vehicles. Instead, we have requested the construction of paddy procurement centers in our constituencies,".