சென்னை: சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. கூட்டணி குறித்து திருமாவளவன் மாறுபட்ட கருத்ததுகளை கூறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவோம் என்று திருமாவளவன் கூறியிருப்பது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது, "தவெக ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க கூடாதா. ஆட்சி அமைக்க ஆதரவு தந்தோம். அதற்கான வெகுமதி தான் அமைச்சரவை. சிலர் எங்கள் நிலைப்பாட்டையும், என்னைப் பார்த்தும் சிரிப்பு வருவதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளேன். ஏன் நாங்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க கூடாதா.
அமைச்சரவையில் இருந்தாலும் நாங்கள் விலகி இருக்க கூடாதா. தவெகவின் சந்தேகத்தை போக்குவதற்காகவே நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். இடதுசாரிகளும் வெளியே நிற்கிறார்கள். திருமாவளவனும் வெளியே நிற்கிறார். எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம். திடீரென தவெக ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன செய்வது. ஆதரவு தெரிவித்துவிட்டே நாங்கள் திமுக கூட்டணி தான் என்று சொல்கிறார்கள் என நினைக்கிறார்கள். எந்த நேரத்திலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறலாம். வர முடியாது என்பதற்கு என்ன இருக்கிறது. நாங்கள் ஆதரவளித்தோம். அவர்கள் அமைச்சரவையில் பங்களித்தனர். அமைச்சரவையில் இணைந்துவிட்டோம் என்பதற்காகவே நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. விசிக - தவெக கூட்டணி இன்னும் உருவாகவில்லை. இப்படியும் அரசியல் செய்ய முடியும். விசிகவால் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். விலகி இருந்தே அமைச்சரவையில் தொடர முடியும்" என்றார்.அமைச்சரவையில் வெளியே வருவோம்