உங்களை பத்திரமா பார்த்துக்குவோம், சந்தேகம் வேண்டாம்”.. முன்னாள் அதிமுகவினருக்கு உறுதிகொடுத்த ஆனந்த்

  • சென்னை: அதிமுகவினர் தவெகவில் இணையும் நிகழ்வில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "அங்கிருந்து இங்கு வந்துவிட்டோமே என்று யாரும் கலங்க வேண்டாம். உங்களை நாங்கள் மிகவும் பத்திரமாக, கண்ணியத்தோடு பார்த்துக் கொள்வோம். இதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்" என்று உறுதியளித்தார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா இன்று நடைபெற்றது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம் ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று இணையும் நிகழ்வு மகாபலிபுரத்தில் உள்ள அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான என்.ஆனந்த், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தவெக-வில் இணைந்துள்ள தொண்டர்களை வரவேற்றுப் பேசினார். அமைச்சர் என்.ஆனந்த், அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் விதமாகப் பேசினார்.

    என்.ஆனந்த் பேசுகையில், "அன்று வாத்தியார் இன்று நமது தளபதி. இவர்களின் பெயர்கள் வேறாக இருக்கலாம், ஆனால் மக்கள் நலனுக்கான பாதை ஒன்றுதான். எனவே, அங்கிருந்து இங்கு வந்துவிட்டோமே என்று யாரும் கலங்க வேண்டாம், நினைக்க வேண்டாம். உங்களை நாங்கள் மிகவும் பத்திரமாக, கண்ணியத்தோடு பார்த்துக் கொள்வோம். இதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்" என்று உறுதியளித்தார்.

    Advertisement

    மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நினைவு கூர்ந்த ஆனந்த், "இங்கு வந்திருக்கும் உங்களின் முகங்களையும், நீங்கள் தவெக கட்சித் துண்டை அணிந்திருப்பதையும் பார்க்கும்போது, கடந்த தேர்தலில் நீங்கள் விசில் சின்னத்திற்குத்தான் வாக்களித்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.
    கடந்த தேர்தலில் நான் வெறும் நான்கு நாட்கள் மட்டும்தான் உங்களிடம் வந்து ஓட்டு கேட்டேன். மக்கள் எனக்காக வாக்களிக்கவில்லை. நமது மக்கள் தலைவர் விஜய்க்காகத்தான் ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்கள். தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்காத ஒரே மாபெரும் சக்தி வாய்ந்த கட்சி தவெக மட்டும்தான்" என்று தெரிவித்தார்.

    Advertisement

    மேலும் பேசிய அமைச்சர் ஆனந்த், "நமது முதலமைச்சர் விஜய் விரைவில் கரூருக்கு அரசு மற்றும் கட்சி ரீதியாக வருகை தரவுள்ளார். புதுக்கோட்டையில் இரண்டு சிங்கங்கள், கரூரில் மூன்று சிங்கங்கள் எனப் பலம் வாய்ந்த தலைவர்கள் தவெக-வில் இணைந்து கட்சியை வலுப்படுத்தி வருகின்றனர். இனிவரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகம் முழுவதும் நமது கவுன்சிலர்கள், நமது சேர்மன்கள் மட்டும்தான் நாற்காலியில் அமர வேண்டும். மக்களுக்குச் சளைக்காமல் நேர்மையாகச் சேவை செய்வது மட்டும்தான் நமது தவெக அரசின் முதல் மற்றும் இறுதி குறிக்கோள்." எனத் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ''எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களாக, உறுதியான உண்மையோடும் ஓயாத உழைப்போடும் உழைத்த நிர்வாகிகள் இன்றைக்கு மக்களோடு மக்களாக களத்தில் நின்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், தமிழ்நாடு அரசியலில் புதிய அரசியல் சரித்திரம் படைத்திட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் தலைமை செவிமடுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னரும் ஏகோபித்த வரவேற்பை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதனால் நாம் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய அரசிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதையும் செவிமடுக்கவில்லை. ஆனால் இதைச் செவிமடுக்காத அந்த தலைமை, தனிப்பட்ட ஒருவர் இயற்கைக்கும் முரணாக எந்த திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தி என எம்.ஜி.ஆர் சொன்னாரோ, அந்த தீயசக்தியோடு கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    Advertisement

    அதனால் இயற்கையாக உணர்வுகளோடு, மக்களுடைய கருத்துக்களைக் கேட்டு சரித்திரத்தில் நிலைத்து விட்ட பேரறிஞர் அண்ணா சொன்னது போல எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்து தமிழ்நாட்டின் அரசியல் திசையே தீர்மானித்து அண்டை மாநிலங்களை அதிர வைத்திருக்கும் மக்கள் மாற்றத்தின் சக்தி நமது முதலமைச்சர் விஜய். இன்று தமிழ்நாட்டு மக்களின் கனவுக்கு ஒரு பாதை கிடைத்திருக்கிறது. சேவையாற்ற ஒரு களம் கிடைத்து இருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தல்களில் தவெக தான் வெற்றி பெறும்" எனப் பேசினார்.

    English Summary

    Speaking at an event where AIADMK members were joining TVK, Minister N Anand assured them, "Do not feel distressed about having moved here from there. We will look after you with great care and dignity. You need have no doubts about this."