சென்னை: ''சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் மக்களை வதைக்கும் 'டம்மி' முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்'' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினர் மத்தியில் பேசினார்.
மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரகதம் குமாரவேல். இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் மதுராந்தகம் தொகுதிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமாரவேல் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பரந்தாமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் திமுக சார்பில் மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை, இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாம் அனைவரும் பலமுறை சந்தித்திருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவரையும் நான் தனித்தனியாகச் சந்தித்திருக்கிறேன், குழுவாகச் சந்தித்திருக்கிறோம், புகைப்படம் எடுத்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், மிக முக்கியமான ஒரு சூழ்நிலையில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். வருகின்ற 6-ஆம் தேதி மதுராந்தகம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த இடைத்தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறப் போவது உறுதி என்பதைச் சொல்கின்ற வகையில் எழுச்சியோடு இங்கு கூடியிருக்கிறீர்கள். அதற்காகத்தான் நம் வெற்றி வேட்பாளர் பரந்தாமனை, நம் தலைவர் அவர்கள் உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். உங்கள் மீது இருக்கின்ற தைரியத்தில், தலைவர் அவர்கள் உங்களிடத்தில் பரந்தாமனை ஒப்படைத்திருக்கிறார்கள். மிகவும் முக்கியமான தருணத்தில் ஸ்டாலின் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சரியாக 16 நாட்கள் இருக்கின்றன. வெற்றி என்பது சுலபம் கிடையாது. வெற்றி என்பது உறுதி, ஆனால், எப்படி அது உறுதியாகும் என்றால், அடுத்த 16 நாட்கள் நாம் அனைவரும் என்ன களப்பணி செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்து, அந்த வெற்றி நிச்சயம் உறுதியாக்கப்படும். முதலில் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். எதற்காக இந்த இடைத்தேர்தல் வந்தது? இது சாதாரணமாக வந்த இடைத்தேர்தலா? இது இயல்பாக நடந்த, நடக்கக்கூடிய ஒரு இடைத்தேர்தலா? இல்லை. இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். ஆளுங்கட்சியின் குதிரைபேர அரசியலால், இங்கே ஏற்கனவே வெற்றி பெற்ற வேட்பாளர் ஆளுங்கட்சியிடம் விலை போன காரணத்தினால், இன்றைக்கு மதுராந்தகத்தில் இந்த ஒரு இடைத்தேர்தல், மதுராந்தகத்தில் மட்டும் கிடையாது, இனி தாராபுரத்திலும் சேர்த்து இந்த இடைத்தேர்தல் உங்கள் மீது, நம் மீது, இந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. மே 4-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தலில், இந்த ஆளுங்கட்சி, இங்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சி பெரும்பான்மைக்கு 118 இடங்களை வெல்ல வேண்டும். வென்றார்களா? வெற்றி பெறவில்லை. வெறும் 107 இடங்களில் வென்றார்கள். அறுதிப் பெரும்பான்மையோடு இந்த ஆட்சி அமைந்திருக்கிறதா என்று கேட்டால் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நமக்கும் இங்கு அமைந்திருக்கக்கூடிய ஆளுங்கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் பார்த்தால் வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசம்தான். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், கருணாநிதி உடன்பிறப்புகளின் உழைப்பால், நம் தலைவர் பெயரைச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எல்லாம் சொல்லி, மக்களிடத்தில் சென்று வாக்கு பெற்று வெற்றி பெற்ற அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியால்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம் தயவில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்மோடு கூட்டணி அமைத்தவர்கள் ஒவ்வொருவராகச் சென்றார்கள். நம்மிடம் என்ன சொல்லிவிட்டுச் சென்றார்கள், மக்களிடத்தில் என்ன சொல்லிவிட்டுச் சென்றார்கள்? குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதன் மூலமாக ஆளுநரின் ஆட்சி இங்கு வந்துவிடக் கூடாது என்று நம் தலைவரிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள். சிலர் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டார்கள்; ஒரே இரவில், திருட்டுதனமாக. நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு அவர்களின் நிலைமை என்னவென்று உங்களுக்குத் தெரியும். ஏனெனில் இவர் நேரடியாகப் பிரதம மந்திரி பதவி வேட்பாளருக்கே சென்றுவிட்டார். திரும்பச் சேர்த்தால் நீங்களா விட்டுவிடுவீர்களா? எப்படி இந்த ஆட்சி அமைந்தது? அன்று அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக வந்தன. பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜெயலலிதா என்று பெரிய பெரிய சுனாமிகளையே பார்த்தவர்கள்தான் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள். அப்பொழுதெல்லாம் அதையெல்லாம் கடந்து மீண்டும் நாம் வந்தோம். கருணாநிதிக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்றாரவ்கள். ஆனால் ஸ்டாலின் தலைமையில் 10 தேர்தல்களில் வென்று காட்டியிருக்கிறோம். ஆகவே, இப்போது மீண்டும் ஒரு சிறிய பின்னடைவுதான், ஒரு சிறிய பின்னடைவை அடைந்திருக்கிறோம். திரும்பவும் நாம் மீண்டு வந்து முன்னிலைக்கு வருவோம். மிகப்பெரிய வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெறுவோம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் மக்களை வதைக்கும் 'டம்மி' முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம். என்றைக்கும் உறுதியோடு களத்தில் மக்களோடு நாம் நிற்போம். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதுமே தி.மு.க. - எதிர் மற்றவர்கள் என்றுதான் வரும். நம்மை எதிர்த்து யார் நிற்கிறார்களோ, நம்மை எதிர்த்து யார் களம் காண்கிறார்களோ அவர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே நிலையாக, வலிமையாகத்தான் இருக்கும். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் திட்டமிட்டு உழைத்தீர்கள் என்றால், நிச்சயம் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். களத்தில் இறங்கி, எந்த அளவிற்குப் பணியாற்றுகிறீர்களோ, அதே அளவிற்குச் சமூக ஊடகங்களிலும் பணியாற்றுங்கள். குறிப்பாக, இளைஞர் அணியின் பணி மிகச் சிறப்பாக அமைய வேண்டும். அதற்காகத்தான் நாம் திட்டமிட்டு எந்தவித அகந்தையும் பார்க்காமல் நுட்பமான அளவில் இறங்கிப் பணியாற்றினோம் என்றால் நிச்சயம் மதுராந்தகத்தில் நாம் வெற்றி பெறப்போவது உறுதி. ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம்மை எதிர்த்து நிற்கின்ற வேட்பாளருக்கு வாக்களித்தால், அவர்கள் நூற்றில் ஒருவராகத்தான் இருப்பார்கள். ஆனால் பரந்தாமன் வென்றால், உங்களில் ஒருவராக, மக்களோடு ஒருவராக நிச்சயம் இருப்பார். எனவே உங்களுடைய பணிகளுக்குத் தலைவர் அவர்களும் நானும் நாங்கள் அனைவரும் நிச்சயம் தோளோடு தோள் நிற்போம். விரைவில் ஸ்டாலினும் மதுராந்தகத்துக்குப் பிரச்சாரத்துக்கு வர இருக்கின்றார், உங்களை எல்லாம் சந்திக்க இருக்கின்றார். மிகுந்த நம்பிக்கையோடு தேர்தல் பணியைச் செய்யச் செல்லுங்கள். சகோதரர் பரந்தாமனின் வெற்றியை உறுதி செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்திற்கான தொடக்கமாக வருகின்ற ஒன்பதாம் தேதி வருகின்ற இடைத்தேர்தல் முடிவு இருக்கும்'' என்றார்.