சென்னை: மேற்கு வங்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அலுவலகம் தொடங்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இருப்பினும், இதை தவெக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இப்போது தமிழ்நாட்டில் மட்டுமே தவெக கவனம் செலுத்தி வருவதாகவும் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தவெக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு வெளியே கட்சியை விரிவுபடுத்தும் திட்டம் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் புர்த்வான் மாவட்டம் ஃபகுபூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தவெக கட்சியை ஆரம்பித்தனர். தமிழகத்தில் இருந்து வந்த அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்த அலுவலகம் தொடங்கப்பட்டதாக கூறினர். மேலும், தமிழ்நாட்டை போலவே முதலில் மக்கள் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அதன் பிறகே தேர்தல் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் கூறினர்.
சைதாலி ராய் என்பவர் தன்னை தவெகவின் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் என கூறி கொண்டார். மேலும், தவெகவுக்கு முதற்கட்டமாக அங்கு சுமார் 5,000 ஆதரவாளர்கள் இருப்பதாகவும் கட்சியை விரிவுபடுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் நலப்பணிகளிலேயே இப்போது கவனம் செலுத்த போவதாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவுகளை தமிழ்நாட்டில் உள்ள தவெக தலைமையே முடிவெடுக்கும் என்றெல்லாம் கூறினார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அடுத்து பிரதமர் ஆக வேண்டும் என்றும் 2029ல் அவர் தான் பிரதமர் என்றும் தவெகவினர் கூறி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே மேற்கு வங்க தவெக பிரிவு திறக்கப்பட்டு இருக்கலாம் என்றே நெட்டிசன்கள் கருதினர். இதனால் பலரும் மேற்கு வங்க தவெகவுக்கு வாழ்த்து கூட தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தவெக மறுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் தவெக சார்பில் எந்தவொரு பிரிவு அல்லது அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தவெக தெரிவித்துள்ளது. மேலும், அங்கு இப்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தவெக கட்சியின் தலைமை எந்த அனுமதியும், ஆதரவும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் கட்சியை அமைத்திருக்கலாம் என்றும் அதேநேரம் இவை எல்லாம் தவெகவின் அதிகாரப்பூர்வ விரிவாக்கமாக கருதப்படாது என்றும் தவெக தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பு மேலும், "தற்போது தவெக முழுமையாக தமிழ்நாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை முடிந்தவரை செயல்படுத்துவது மற்றும் தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். மேற்கு வங்கத்தில் கட்சியை விரிவுபடுத்துவது குறித்து தவெக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றத்தால் ஈர்க்கப்பட்டு மேற்கு வங்கத்தில் விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவு தெரிவிக்கும் மக்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். விஜய்க்கு அங்கு கணிசமான அளவில் ரசிகர்கள் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றாலும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவோருக்கு வாழ்த்துகள் எனவும் தவெக தெரிவித்துள்ளது.மேற்கு வங்க தவெக
மறுப்பு
தமிழ்நாடு மட்டுமே
மகிழ்ச்சி