சென்னை: வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையின் சிறப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த மெட்ரோ ரயில் சேவை நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
பூந்தமல்லி- வடபழனி இடையே 14.64 கி.மீ. நீளம் கொண்ட மெட்ரோ ரயில் சேவை இதுவாகும். இந்த இரு வழித்தடங்களிடையே பயண நேரம் 40 நிமிடங்கள். மொத்தம் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. போரூர் சந்திப்பு- வடபழனி இடையே 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் இப்போதைக்கு நிற்காது. அவை சாலிகிராமம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது. மார்ச் மாதத்திற்கு மேல் அந்த நிலையங்கள் இயங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் பூந்தமல்லியில் புறப்படும் மெட்ரோ ரயில், போரூர் சந்திப்பு வரை வந்துவிட்டு , வேறு எங்கும் நிற்காமல் நேராக வடபழனிக்கு சென்றுவிடும். போரூருக்கு பிறகு வடபழனியில் ரயில் நிற்கும். வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழியாக பயணிகள் வெளியேற வேண்டும். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ஸ்கிரீன் டோர் 5.5 அடி கொண்ட தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் இயங்கும் போது பயணிகள் பாதையில் விழுந்துவிட்டால் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தி அந்த பயணியை காப்பாற்றிவிடலாம். 80 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். 4ஆம் வழித்தடத்திற்கென்று 36 ரயில்கள் உள்ளன. தற்போது 10 ரயில்களை மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் 3 பெட்டிகளை கொண்டதாக இருந்தாலும், 6 பெட்டிகளுடன் அவற்றை இயக்க முடியும். ஆனாலும் மூன்று மூன்று பெட்டிகளாக அவற்றை இயக்கும் போது ரயில்களின் சேவை அதிகமாகும். 4ஆம் வழித்தடமான வடபழனி சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால் பயணிகள் அங்கு இறங்கி ஏற்கெனவே இயக்கத்தில் உள்ள வழித்தடம் 2-க்கு மாறி, எழும்பூர், சென்னை சென்ட்ரல், ஆலந்தூர், சென்னை விமான நிலையங்களுக்கு சென்றடைய முடியும். அத்துடன் சென்னை- ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை வளாகத்தை எளிதில் சென்றடைய இந்த வழித்தடம் பெரிதும் உதவும். இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆளில்லா ரயில் இயக்க வசதி, தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தானியங்கி பாதுகாப்பு அமைப்பு, தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு, பயணிகள் பாதுகாப்பு கதவுகள் போன்ற புது அம்சங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இந்த திட்டத்தில் இரட்டை அடுக்கு மெட்ரோ பகுதி அமைந்துள்ளது. 4, 5 ஆம் வழித்தடங்களுக்கு இடையே ரயில் மாறும் வசதியும் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு ரூ 20 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது போல் பூந்தமல்லியில் இருந்து ஐயப்பன்தாங்கல், தெள்ளியாகரம், போரூர் மூலைக் கடை, போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு பூந்தமல்லியில் இருந்து செல்ல ரூ 30 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை பயணம் செய்ய அதிகபட்சமாக ரூ 40 கட்டணம் ஆகும். இவ்வாறு பல்வேறு சிறப்பு இந்த மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உள்ளன.இந்த திட்டத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
ரயிலின் வேகம் என்ன?
ஆலந்தூருக்கு செல்ல முடியுமா?
என்னென்ன சிறப்புகள்?
கட்டணம் எவ்வளவு?