எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா

  • சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. குடும்பத் தகராறு முற்றிய நிலையில், போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையையும் மீறி அதிகாலை வேளையில் இந்த பயங்கர விபரீதம் நிகழ்ந்துள்ளது. தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் கொடுத்த திடுக்கிடும் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தப்பியோடிய கொடூரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த 46 வயதான சுரேஷ் என்ற எலக்ட்ரீசியனுக்கும், மன்னாந்தலையைச் சேர்ந்த 36 வயதான ஹசீனா பீவி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.

    Advertisement

    இவர்கள் கடந்த 4 மாதங்களாக நாலாஞ்சிரா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில காலங்களாகவே தம்பதிக்கு இடையே கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    எலக்ட்ரீஷியன் மனைவி

    கணவன் சுரேஷுக்கு மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட தீராத சந்தேகமே இந்த தொடர் சண்டைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கோபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹசீனா பீவி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு கடந்த வாரம் தான் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் வந்ததில் இருந்தே தம்பதிக்குள் சண்டை சச்சரவுகள் இன்னும் அதிகமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    இந்த மோதல் முற்றிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹசீனா பீவி தன் கணவனுக்கு எதிராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து, மன்னாந்தலை போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி, கவுன்சிலிங் கொடுத்து சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பிள்ளைகள் கண் முன்னாடியே

    ஏற்கனவே மனைவி மீது கோபத்தில் இருந்த சுரேஷுக்கு, போலீசில் புகார் அளித்தது இன்னும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொடுத்த அட்வைஸ் எதையும் கணவன் சுரேஷ் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம்.. வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் விடிய விடிய வெடித்துள்ளது.

    Advertisement

    இதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில், வீட்டில் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. கணவன், மனைவி கத்தும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த 4 குழந்தைகளும் பயந்து கண் விழித்துள்ளனர். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தன் 4 பிள்ளைகளும் நேரில் பார்த்து கதறித் துடித்த நிலையில், மனைவி ஹசீனா பீவியின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார்.

    கேஷூவலாக பாத்ரூமில் நுழைந்து

    கணவனின் இந்த திடீர் கொடூர தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத ஹசீனா பீவி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி சில நிமிடங்களிலேயே அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    Advertisement

    மனைவியைக் கொன்ற பிறகும் எந்தவொரு பதற்றமும் பயமும் இல்லாமல், சுரேஷ் மிகக் கொடூரமாக அந்த கொலைக் கத்தியை வாஷ்பேசினில் கழுவி சுத்தம் செய்தாராம்.. பிறகு பாத்ரூமுக்கு சென்று தன் கைகளையும் சுத்தம் செய்துவிட்டு, அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

    பெற்ற தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கதறிய குழந்தைகளில், மூத்த மகள் உடனடியாக மன்னாந்தலை போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்.

    பாதுகாப்பு வளையத்தில் குழந்தைகள்

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹசீனா பீவியின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    தாயை இழந்து, தந்தையின் இந்த கோர முகத்தைக் கண்டு மிரண்டு போய் நிற்கும் 4 குழந்தைகளையும் போலீசார் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கொடூர கணவன் சுரேஷைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் பிள்ளைகளின் கண் முன்னாடியே நடந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    What Did the Electrician Do at the Washbasin at Midnight? 4 Children Left in Shock as Kerala Reacts