சென்னை: சட்ட விரோத பேனர் வைப்பதற்காக, சாலையை மறித்து போராட்டம் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்தவர்களுக்கு தான் அறை விழுந்திருக்க வேண்டும். ஆனால் சாலையை மறித்தால் நான் எப்படி வேலைக்கு போவது என்ற நியாயமான கோபத்துடன் கேள்வி கேட்ட ஒரு இளைஞரின் (தஞ்சை இளைஞரின்) வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முதலில் அடிக்க கை ஓங்கியது மற்றும் அடித்தது அந்த காவலர் தான். ஆனால் அவர் குற்றவாளி ஆக்கப்படவில்லை. பதிலுக்கு அடித்த இளைஞரை ஒரு தீவிரவாதி போல இழுத்துச் சென்றுள்ளனர். இன்னும் கால்வல் நிலையத்தில் வைத்து என்ன செய்தார்களோ தெரியவில்லை என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக நிர்வாகியான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், தமிழக காவல்துறை அதிகாரிகளின் இந்த அத்துமீறிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்! அப்பாவி இளைஞனை தாக்குவதும், சித்ரவதை செய்வதும் எந்த வகையில் நியாயம்? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட இளைஞனிடம் அவர்கள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட வேண்டும். காவல்துறையின் அதிகாரம் மக்களைப் பாதுகாப்பதற்கே - அச்சுறுத்துவதற்கோ, தாக்குவதற்கோ அல்ல!" இவ்வாறு கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "நீங்க ரோட்ல போறீங்க திடீரென நாலு குண்டர்கள் சாலைய மறிச்சு உங்கள போக விடாம செஞ்சா நீங்க கேள்வி கேட்கதான் செய்வீர்கள். இப்ப போலீஸ் வந்தா சாதாரண பொதுமக்கள தொந்தரவு செஞ்சவங்களை விரட்டனுமா இல்ல கேள்வி கேட்ட பொதுமக்களை விரட்டனுமா?" என்று கேட்டுள்ளார். பாஜக மாநில நிர்வாகி அஸ்வதமன் வெளியிட்டிருந்த பதிவில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான வி.சி.க.வினர் பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலை மறியல் ஈடுபட்டபோது, அதைத் தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்துவது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. போக்குவரத்தை முடக்கிய வி.சி.க.வினரைக் கட்டுப்படுத்தாமல், தன் வேலைக்குச் செல்ல வழி கேட்ட சாமானிய இளைஞரைத் தாக்கியது காவல்துறையின் தவறான அணுகுமுறை. பொது இடத்தில் இளைஞரைத் தாக்கிய காவல் துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியின் கூட்டணி பலத்தில் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், அதைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். திரைப்படம் மற்றும் அரசியல் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருந்த பதிவில், "இந்த இளைஞர் தற்போது சிறையில் எப்படி இருக்கிறார்? மீண்டும் அடிக்கப்பட்டாரா? இவரது எதிர்காலம் என்னவாகும்? குடும்பத்தாரின் தற்போதைய நிலை என்ன? இவருக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படுமா? மக்கள் கேள்வி கேட்கிறார்கள். இதுகுறித்து காவல்துறை மந்திரி விஜய் உடனே பதில் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அதேபோல் நான்காவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "இந்தப்பையனை அரஸ்ட் பண்ணிருக்காங்க பணியில் இருக்கும் காவலரை அடித்தார் அதனால் அது சரி தான். ஆனால் அவனை அடித்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவனை அடிக்கத்தூண்டியதே அவர் தானே ? இது தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தூயசக்தி காவல்துறையின் லட்சணமா? மக்கள் காவலுக்கு இருக்க வேண்டிய துறை மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் அதிகாரத்துறையாக தொடர்வது வெட்கக் கேடில்லையா ? இருவரையும் சமமாக சட்டத்தின் முன் நிறுத்தாமல் சாமானியக்கு ஒரு சட்டம் அதிகார வர்க்கத்திற்கு ஒரு சட்டம் என்பது எந்த விதத்தில் நியாயம் ? இது மாற்றம் இல்ல ஏமாற்றம் தான் என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கொண்டே உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார். இப்படி பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்கள் பலர் தவெக அரசின் செயலை கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.
அதற்கும் மேலாக அந்தப் பையன் மீது 6 பிரிவுகளில் சம்பந்தம் இல்லாத வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை. நான் தூய சக்தி என வாய் கிழிய மேடைக்கு மேடை கொக்கரிக்கிறீர்களே முதல்வர் விஜய்.