சென்னை டாக்டருக்கு நேர்ந்த கதி! 1 ஏக்கர் 98 சென்ட் நில பத்திரம்! ராமநாதபுரம் சார்பதிவாளர் லஞ்ச பேரம்

  • சென்னை: சென்னை டாக்டர் ஒருவர் ராமநாதபுரம் சார் பதிவாளரிடம் ஏமாந்துள்ளது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிலப்பதிவு அலுவலகத்தில் டாக்டரிடம் சார்பதிவாளர் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளாராம்.. அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகி வரும் நிலையில், இந்த லஞ்ச சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், அரசு அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அப்படியென்ன நடந்தது?

    Advertisement

    சென்னை குரோம்பேட்டையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் ஹாலிக் அலாவுதீன். இவருக்கு 32 வயதாகிறது.. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்.

    1 ஏக்கர் 98 சென்ட் நிலம் பத்திரப்பதிவு

    இவர், தனது தாயாரின் பெயரில் ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியில் 1 ஏக்கர் 98 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக, ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்த நிலப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்கு முறைப்படி விண்ணப்பித்த நிலையில், சார்பதிவாளராகப் பணியாற்றும் ராமநாதன், அந்தப் பத்திரப் பதிவை முடிக்க ஹாலிக் அலாவுதீனிடம் அதிரடியாக ரூ.50 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

    Advertisement

    ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்டது அந்த மருத்துவர் ஹாலிக் அலாவுதீனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தாலும் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், வேறு வழியின்றி அந்தச் சார்பதிவாளரின் வங்கி கணக்கிற்கு முதல் கட்டமாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, சார்பதிவாளரின் ஏஜென்டாகச் செயல்பட்டு வந்த அயூப்கான் என்பவரிடம், லஞ்சத்தின் அடுத்த கட்டமாக ரூ.17 லட்சத்தை ரொக்கமாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ரூ.20 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற பிறகும், சார்பதிவாளர் ராமநாதன் தனது பேராசையை நிறுத்தவில்லையாம்.. மிச்சமுள்ள பணத்தை முழுமையாகக் கொடுத்தால் மட்டுமே பத்திரப் பதிவை மேற்கொள்வேன் என்று அவர் பிடிவாதமாக இருந்ததோடு, ஹாலிக் அலாவுதீனைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    பேரம் பேசப்பட்டதன் முடிவில், மீதமுள்ள தொகையில் ரூ.15 லட்சத்தை உடனடியாகத் தருமாறு ராமநாதன் நெருக்கடி கொடுத்துள்ளார். இதில் ரூ.3 லட்சத்தை ரொக்கமாகவும், எஞ்சிய ரூ.12 லட்சத்தை அவர் குறிப்பிடும் குறிப்பிட்ட வங்கி கணக்கிலும் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

    சார் பதிவாளர் லஞ்சம்

    இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக வழங்க மனமில்லாத டாக்டர் ஹாலிக் அலாவுதீன், இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். மருத்துவரின் புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், ஹாலிக் அலாவுதீன் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை சார்பதிவாளர் ராமநாதனிடம் வழங்கச் சென்றார்.

    Advertisement

    ஹாலிக் அலாவுதீன் லஞ்சப் பணத்தை ராமநாதனிடம் கொடுத்த அந்தத் தருணத்தில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து சார்பதிவாளர் ராமநாதனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

    பரமக்குடி பெருமாள் தெருவில் பரபரப்பு

    இந்த லஞ்ச சம்பவத்தில் சார்பதிவாளருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ஏஜென்ட் அயூப் கானையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பத்திரப் பதிவு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    சார்பதிவாளர் ராமநாதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் லஞ்சமாகப் பெற்ற ரூ.20 லட்சத்தை மீட்கும் முயற்சிகளிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரது பரமக்குடி பெருமாள் தெருவில் உள்ள வீட்டில் அதிரடி சோதனையை நடத்தினார்கள்..

    Advertisement

    அந்த வீட்டில் எந்தவிதமான பணமும் சிக்காத நிலையில், எமனேஸ்வரம் அருகேயுள்ள வீரபெருமாள் காலனியில் உள்ள ராமநாதனின் இன்னொரு வீட்டில் போலீசார் தீவிர சோதனையைத் தொடர்ந்தனர்.

    அரசு அலுவலகத்தில் இப்படியா

    அரசு அலுவலகத்தில் ஒரு டாக்டரே லஞ்சக் கொடுமைக்கு ஆளாகி, லஞ்ச ஒழிப்புத் துறையை நாடி போராடி நீதியை பெற்ற இந்த சம்பவம், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

    நேர்மையான முறையில் நிலத்தைப் பதிவு செய்ய வந்த இடத்தில், லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!!

    English Summary

    What Happened to a Chennai Doctor? Alleged ₹50 Lakh Bribe Deal by Ramanathapuram Sub-Registrar Over 1.98-Acre Land Document