கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம்

  • தஞ்சாவூர்: சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் "காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்" என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அனுமதியின்றி சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த த.வெ.க கொடிக்கம்பம் மற்றும் பேனரை போக்குவரத்து காவலரான தேவநாதன் அப்புறப்படுத்த முயன்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவல்துறையினரைத் தாக்கி அவரது கையை முறித்துள்ளதாக செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் வந்த செய்தியில், "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகச் சாலையின் குறுக்கே தவெகவினர் பேனர்களை வைத்து, இடைஞ்சல் ஏற்படுத்தினாராம். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் தேவேந்திரன் பேனரை அகற்ற முயன்றுள்ளார். அப்போது தவெக வார்டு உறுப்பினர்களான அருண், காளி இருவரும் காவலர் தேவேந்திரனைத் தாக்கியுள்ளனர். இதில், அவருடைய வலது கையின் மணிக்கட்டு பகுதி எலும்பு முறிந்தது.

    இந்நிலையில், இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்க அதிகாரிகள் வருவதற்குள் அருண், காளி இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த தேவேந்திரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்றுசெய்தி வெளியிட்டிருந்தது.

    Advertisement

    இந்த செய்தியை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், "23/05/2026 சனிக்கிழமை இரவு, அருண் S/o நாகப்பன் மற்றும் காளிதாஸ் S/o சுகுமார் ஆகிய இருவர் தங்களது உள்ளூர் தெரு திருவிழாவிற்காக பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக சாலையில் பொருட்கள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

    அப்போது ரோந்து பணியில் இருந்த Delta Cop-6 காவலர்கள் Gr.II PC தேவநாதன் மற்றும் Gr.I PC ராம்குமார் ஆகியோர், சாலையை மறித்திருந்த பொருட்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

    Advertisement

    அதேபோல், காவலர் தேவநாதனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    "The news report published in Kumbakonam-claiming that 'TVK members broke Constable Devanathan's arm'-is incorrect," clarifies the Police