சென்னை: தவெக - திமுக மோதல், அதிமுக உட்கட்சி பிரச்சனை, தவெக கூட்டணியில் பிரச்சனைகள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் "இடதும் இல்லை, வலது இல்லை மய்யமே எங்கள் கொள்கை" என முழக்கத்தோடு அரசியலுக்கு வந்த கமலஹாசன் என்னவானார்? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாத மக்கள் நீதி மையம் அடுத்து என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வியும் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இரு பெரும் திராவிட கட்சிகளை அடித்து நொறுக்கி ஆட்சியைப் பிடித்திருக்கிறது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்.
எதிர்பாராத தோல்வியால் அதிர்ச்சியில் இருக்கும் திமுகவும் அதிமுகவும் அடுத்து என்ன செய்வது? என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு என தமிழக வெற்றிக்கழக அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், லஞ்ச ஒழிப்பு, போதை தடுப்பு என சில நல்ல விஷயங்களையும் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் செய்து வருகிறார்.
மறுபுறம் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் பிரச்சனை, அடிக்கடி ஆட்டம் காட்டும் கம்யூனிஸ்டுகள் என சில விவகாரங்கள் கூட்டணி அரசை ஆட்டம் காண வைக்க தொடங்கியிருக்கின்றன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை ஆரம்பித்த கமலஹாசன் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பு பல்கலைக்கழகம் என்றால் அது கமலஹாசன் தான். களத்தூர் கண்ணம்மாவில் சின்னஞ்சிறு பிள்ளையாக திரையில் கால் பதித்த அவர் நடன உதவியாளராக, நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, வசனகர்த்தா என பல தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தற்போது கூட ஏஐ படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறுகிறார் கமலஹாசன். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அரசியல் அரிதாரம் பூசிக் கொண்ட கமலஹாசன் குழப்பமான முடிவுகளை எடுத்து வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. கோவை உள்ளிட்ட சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுகள் கிடைத்தாலும், கமலஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார். இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒரு சில வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் யாருமே வெல்லவில்லை. அதற்கு பிறகு விக்ரம், பிக் பாஸ் என திரை அரசியலுக்கு பயணம் மேற்கொண்டார் கமல். மக்கள் நீதி மய்யம் என்றாலே அறிக்கை ட்விட்டர் என்ற அரசியலோடு நின்று விட்டது. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து போராடவில்லை என்ற குற்றச்சாட்டு கமல் மீது முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே டிவியை உடைத்து திமுகவை கடுமையாக விமர்சித்த கமலஹாசன் காங்கிரசுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கூட்டணியில் அங்கம் வகித்த அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும், 10 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என சொல்லப்பட்டது. மக்களவைத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வென்ற நிலையில் அதற்கு பிறகு கமலஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. சொல்லப்போனால் ட்விட்டர் அரசியல் கூட செய்யவில்லை என்ற விமர்சனம் எழுப்பப்பட்டது. இதற்கிடையே திடீரென அரசியலில் குதித்த விஜய் நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். விஜய் நடந்தால் செய்தி, பேசினால் செய்தி, வீட்டுக்கு வெளியே வந்தால் செய்தி என நாள்தோறும் விஜய் புராணம் பாடப்பட்டது. பல்வேறு சிக்கல்கள், நெருக்கடிகள் கடந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்தித்த விஜய் தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். ஆனால் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் தங்களுக்கு சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனக் கூறி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட போதும் தற்போது வரை பெரிய அளவில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கவில்லை கமல். நாடாளுமன்றத்திலும் கமலஹாசனின் பேச்சு எடுபடவில்ல. இதற்கு இடையே கட்சியிலிருந்து ஏற்கனவே பல்வேறு முக்கிய முகங்கள் வெளியேறிவிட்ட நிலையில் காலாவதியாகிய விடும் நிலைக்கு வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் என அந்த கட்சியினரே புலம்புகின்றனர். பெயருக்கு செயற்குழு பொதுக்குழு நடத்திவிட்டு ட்விட்டரில் நான்கு ஐந்து போஸ்ட்களை போட்டுவிட்டு கடந்து சென்று விடுகிறார் கமலஹாசன். கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து தேர்தல்களில் நின்று தோற்று தற்போது என்ன செய்வது? என தெரியாமல் பல வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். இருக்கும் நிர்வாகிகளும் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதற்குள்ளாவது கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தட்டி எழுப்ப வேண்டும் என்ற குரல்கள் ஆழ்வார்பேட்டை ஆபீஸில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம்
சட்டமன்ற தேர்தல்
ட்விட்டர் அரசியல்
மக்களவைத் தேர்தல்
விஜய்
மாயமான மய்யம்
கமல் எங்கே?