சென்னை: அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டால், அவர் தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார். இதற்காக அரசு தனியாக இடைநீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பீகாரில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகியின் ஜாமீன் வழக்கை விசாரித்தபோது நீதிபதிகள் இந்த முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் அரசு சதர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் விஷ்வஜீத் சிங் என்பவர் நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
அதே மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவருக்கு ரூ.36,421 சம்பள நிலுவை தொகை வழங்கப்பட வேண்டியிருந்தது. இந்தப் பணத்தை பெற்று தருவதற்காக விஷ்வஜீத் சிங் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த ஒப்பந்த ஊழியர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் 2025-ம் ஆண்டு விஷ்வஜீத் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஷ்வஜீத் சிங் சுமார் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதாவது, போலீஸ் காவலில் அல்லாமல் நீதிமன்ற உத்தரவின்படி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் விஷ்வஜீத் சிங்குக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஆனால், லஞ்சம் கேட்டதாகப் புகார் அளித்த ஒப்பந்த ஊழியர் இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விஷ்வஜீத் சிங்குக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து 2026 ஜூலை 1-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், அவரை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது. இதனால், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விஷ்வஜீத் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "லஞ்சமாக கேட்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது மட்டும் ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது.. ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்கனவே குற்ற பின்னணி இருந்தாலோ, வழக்கின் தன்மை மிகவும் தீவிரமாக இருந்தாலோ ஜாமீன் மறுக்கப்படலாம்.. இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் லஞ்ச தொகை சிறியது என்று குறிப்பிட்டிருந்ததை பாட்னா ஹைகோர்ட் ஏற்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் காரணத்துக்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீனையே ரத்து செய்திருக்க வேண்டியதில்லை" என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் விஷ்வஜீத் சிங்கின் ஜாமீனை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.. அத்துடன் செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய ஜாமீனையும் உறுதி செய்தனர். இதே விசாரணையின்போது, விஷ்வஜீத் சிங்கின் பணிநிலை குறித்தும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு சுமார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்துள்ளார். அப்போது நீதிபதி ஜே.பி. பர்திவாலா கூறியதாவது, "ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர் தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார். இதற்காக அரசு தனியாக இடைநீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.,. ஆனால், விஷ்வஜீத் சிங் கைது செய்யப்பட்டபோது அவரை பணியிடைநீக்கம் செய்த பீகார் அரசு, பிறகு அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. அதன்பிறகு அவர் மீண்டும் அதே அரசு மருத்துவமனையில், அதே நிர்வாகி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்த ஒருவரின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.. இந்த விவகாரத்தை பீகார் மாநில அரசு விரைவாக பரிசீலித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.அரசு ஊழியர் கேட்ட லஞ்சம்
ஜாமீனை எதிர்த்து மனு
உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?
48 மணி நேரம்.. தானாகவே சஸ்பெண்ட்!