சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்கும் நோக்கில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து கட்சி மாறச் செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த 'ஆபரேஷன் மேகாலயா' விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சுமார் ஒரு வாரம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி நடந்த நிலையில், கடைசியில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியை அமைத்தது. இருப்பினும், தவெக அரசை கவிழ்க்க சதி நடந்ததாக புகார்கள் கிளம்பின.
இது அத்தனையும் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா கொடுத்த புகாரில் தான் ஆரம்பித்து. அதாவது அவர் அளித்த புகாரில், கருத்துக் கணிப்பு அமைப்பான IPDSஐ நடத்தும் யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலர் தன்னை அணுகி, சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தியதாக கூறினார். மேலும், இதற்காக ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக குற்றம்சாட்டினார். இருப்பினும், தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க முடியாது என தான் சொன்னதாகவும் அதன் பிறகு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விஜய் அரசை கவிழ்க்க ஆபரேஷன் மேகாலயா என்ற பெயரில் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதில் சுமார் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை அணுகி, பணம் மற்றும் பிற சலுகைகள் வழங்குவதாக பேரம் பேசியுள்ளனர். ஆளும் அரசின் பெரும்பான்மையை சிதைக்க முயற்சி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய்யின் தவெக அரசை கவிழ்க்கவே இந்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, டிவி சேனல் ஒன்றில் மூத்த செய்தியாளராக பணியாற்றும் விஜயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், அவர் நள்ளிரவு நேரத்தில் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இரவு நேரத்தில் செய்தியாளரை போலீசார் துன்புறுத்துவதாக சாடியுள்ளனர். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் நடவடிக்கையாக இதை அவர்கள் விமர்சித்துள்ளனர். உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் செய்தியாளர் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும், எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் இந்த குற்றச்சாட்டுகளை திமுக முழுமையாக மறுத்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தவெக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும், இதற்கு சட்டரீதியாகப் பதிலளிக்கப்படும் என்றும் திமுக தரப்பு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த 'ஆபரேஷன் மேகாலயா' விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவகாரமாக வெடிக்கும் என்றே தெரிகிறது.பின்னணி
விசாரணை
கண்டனம்
திமுக மறுப்பு