பூர்வீக சொத்து.. கூட்டு குடும்ப சொத்தில் பங்கு தராவிட்டால் என்ன செய்வது? 12 வருட சட்டம் சொல்வது என்ன

  • சென்னை: இந்தியாவில் பூர்வீக சொத்து எனப்படும் பரம்பரை சொத்துக்களுக்கான வாரிசுரிமை என்பது ஒருவருக்கு பிறப்பிலேயே கிடைத்து விடுகிறது.. தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா காலத்து சொத்துக்கள் பிரிக்கப்படாமல் இருக்கும் வரை கூட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதில் சம பங்கு உண்டு.. இந்த சொத்துக்களை உரிமை கோருவதில் கால வரம்பு சட்டம் என்ன சொல்கிறது, எந்த சூழ்நிலையில் ஒருவர் தன் பூர்வீக சொத்து உரிமையை இழக்க நேரிடும் என்பதில் பலருக்கும் தவறான புரிதல்கள் நிலவி வருகின்றன.. அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகும்..

    Advertisement

    12 ஆண்டுகள் உரிமை

    "12 ஆண்டுகளுக்குள் உரிமை கோராவிட்டால் பூர்வீக சொத்துரிமை பறிபோய்விடும்" என்று பொதுவான ஒரு கருத்து மக்களிடம் நிலவி வருகிறது.. ஆனால் இது முழுமையான உண்மை கிடையாது.

    Advertisement

    இந்திய கால வரம்பு சட்டம் 1963ன் படி, பூர்வீக சொத்தின் கூட்டு வாரிசாக இருக்கும் ஒருவருக்கு சொத்துரிமை தானாக மறைந்து விடாது.. கூட்டு குடும்ப சொத்தில் ஒரு பங்குதாரர் தமக்கான பாகப்பிரிவினை கோரி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.. இருந்தாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே கால வரம்பு விதிகள் பொருந்தும்.

    முக்கியமாக Ouster or Denial of Rights அதாவது "வெளியேற்றம் அல்லது உரிமை மறுப்பு" எனப்படும் சூழ்நிலை உருவாகும் போது மட்டுமே கால வரம்பிற்கான விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

    பூர்வீக சொத்து உரிமை

    குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உங்களை கூட்டு சொத்தில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கி வைத்தாலோ அல்லது உங்களின் சொத்துரிமையை வெளிப்படையாக மறுத்து உங்களுக்கு பங்கு தர முடியாது என்று மறுப்பு தெரிவித்தாலோ, அந்த அதிகாரப்பூர்வ மறுப்பு வெளிவந்த தேதியில் இருந்து 12 வருடத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டை நாட வேண்டும்..

    Advertisement

    அதேபோல் Adverse Possession எனப்படும் "எதிர் உடைமை" சட்ட விதியும் இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.. அதாவது உங்கள் பூர்வீக சொத்தை வேறொரு நபர் சட்டவிரோதமாகவோ அல்லது உங்கள் அனுமதியின்றியோ தொடர்ந்து 12 ஆண்டுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து அனுபவித்து வரும் பட்சத்தில், அதற்கு நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அந்த சொத்தின் மீதான உடைமையை மீட்பதில் கண்டிப்பாக சிக்கல் ஏற்படும்.

    கால வரம்பு சட்டத்தின் அட்டவணை 65 ன்படி, சொத்தின் மீதான உடைமையை மீட்பதற்கான சிவில் வழக்கைத் தொடரவே 12 ஆண்டுகள் அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.. இது தானாக சொத்துரிமையை பறித்து விடாது என்றாலும், சட்டப்படி உரிமை கோர வேண்டியது அவசியமாகும்..

    Advertisement

    கால அவகாசம் என்ன

    அதேபோல குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் பூர்வீக சொத்து விற்கப்படும் போது, அதனை எதிர்த்து வழக்கு தொடரவும் கால வரம்புகள் உள்ளன.. சொத்து விற்கப்பட்ட விவரம் தெரிந்த தேதியில் இருந்தோ அல்லது புதிய நபர் சொத்தை தன் வசப்படுத்தியதில் இருந்தோ சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.. சொத்து விற்பனைக்கு தடை விதிக்க கோரும் இடைக்கால வழக்குகளுக்கு பொதுவாக சொத்து கைமாறிய தேதியில் இருந்து 3 ஆண்டுகள் அவகாசம் உண்டு.. வழக்கு சார்ந்த கால வரம்புகளுக்குள் இதனை அணுகுவது மிக அவசியமாகும்..

    சொத்தை பிரிக்கும் போது உங்களை யாராவது ஏமாற்றி விட்டால், அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர உங்களுக்கு 3 வருடங்கள் டைம் இருக்கிறது. இந்த 3 வருட கணக்கு என்பது சொத்து பிரித்த தேதியில் இருந்து தொடங்காது.. மற்றவர்கள் உங்களை ஏமாற்றிய விஷயம் உங்களுக்கு எப்போது தெரியவருகிறதோ, அந்த தேதியில் இருந்தே இந்த 3 வருட கால அவகாசம் கணக்கிடப்படும்..

    Advertisement

    18 வயது மேஜர்

    ஒருவேளை சொத்து பிரிக்கப்படும் போது வாரிசுகள் 18 வயதுக்குட்பட்ட மைனராக இருந்தால், அவர்களுக்கு சட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு உள்ளது.. அவர்கள் 18 வயது நிறைவடைந்து மேஜர் ஆன பிறகே, அவர்களுக்கான வழக்கு தொடரும் கால அவகாசம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்..

    2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் படி, திருமணமான மகள்களுக்கும் மகன்களுக்கு இணையான முழுமையான சம உரிமை பூர்வீக சொத்தில் வழங்கப்பட்டுள்ளது.. சொத்துக்கள் முறையாக சட்டப்படி பிரிக்கப்படும் வரை இந்த உரிமை நீடிக்கும் என்பதால், உங்களுக்கான உரிமை மறுக்கப்படும் போது கால தாமதம் செய்யாமல் உடனே சட்டப்படி அணுகுவது நல்லது..!!

    English Summary

    What to do If denied a share In Joint Ancestral Property? What does the 12 years Rule say?