சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு இடைத்தேர்தல்களில் ஒரு தொகுதியில் மட்டும் தவெக வென்றால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். விஜய்யின் பிம்பம் சுக்குநூறாகுமா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக பண்பாட்டு மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அது போல் தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இன்று காலை அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இரு தொகுதிகளின் ஸ்ட்ராங் ரூம்களும் திறக்கப்பட்டன. இதையடுத்து சரியாக காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கின. இதையடுத்து வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரு தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் தவெக முன்னிலை வகித்தது. அது போல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் இரு சுற்றுகளில் மதுராந்தகத்தில் தவெகவும், தாராபுரத்தில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்து ஒரு தொகுதியில் மட்டும் தவெக வென்றால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். முதலில் 7 தொகுதிகள் காலியாக இருந்ததால் சட்டபையின் பலம் 227 ஆக இருந்தது. தற்போது இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டதால் சட்டசபையின் பலம் 229 ஆகும். பெரும்பான்மைக்கு தேவை 115 ஆகும். தவெகவின் பலம் ஏற்கெனவே 107 இருந்த நிலையில் தற்போது ஒரு தொகுதியில் வென்றால் அதன் பலம் 108 ஆகும். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, ஐயூஎம்எல், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தால் தவெகவின் பலம் 122 ஆக இருக்கும். அதாவது பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 7 பேர் அதிகம் உள்ளனர். தவெக ஒரு தொகுதியில் மட்டுமே வென்றால் இனி அதிமுகவில் இருந்து யாரும் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம் என எண்ணமாட்டார்கள். இனி குதிரை பேரம் என்ற வார்த்தையும் அடிக்கடி அடிபடாது. எல்லாவற்றுக்கும் மேல் விஜய் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்திருந்தால் அங்கெல்லாம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கொத்து பரோட்டா போட்டிருப்பார் என தவெக அமைச்சர்கள் கூறி வருவதற்கு இந்த இடைத்தேர்தல் தோல்வி மக்கள் பாடம் கற்று கொடுப்பதாகவே பார்க்கப்படும். அதே போல் விலைவாசி உயர்வு, மின் தடை உள்ளிட்ட பிரச்சினைகளால் தவெக மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது என்பதற்கும் இந்த இடைத்தேர்தல் ஒரு சாம்பிள்!தாராபுரம்
ஸ்ட்ராங் ரூம்
7 தொகுதிகள் காலி
பெரும்பான்மை பலம்
ஒரு தொகுதி