மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? மேகதாது முதல் பயிர்க்கடன் வரை.. இன்று விஜய் தரும் குட்நியூஸ்?

  • சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கியமான முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் இது என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தற்போது சென்னை கோட்டையின் பக்கமே திரும்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள், நிதி நெருக்கடி, டாஸ்மாக் சீர்திருத்தங்கள் எனப் பல முக்கிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதத்திற்கு வரவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனே மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    Advertisement

    டாஸ்மாக் விவகாரம்

    இந்த கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இதனால் அரசுக்கு ஏற்படும் சுமார் 8,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    குறிப்பாக, டாஸ்மாக் மதுபான விநியோகம் மற்றும் கொள்முதல் முறையில் மிகப்பெரிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வர மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை திட்டமிட்டுள்ளது. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் அரசு கஜானாவிற்கு மட்டுமே செல்வதை உறுதி செய்யும் வகையில் புதிய கண்காணிப்பு முறைகள் அமலுக்கு வரவுள்ளன. காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் நிலவும் குளறுபடிகளுக்கும் இதில் தீர்வு காணப்படலாம்.

    Advertisement

    மகளிர் உரிமைத் தொகை 2500

    தேர்தல் களத்தில் தவெக கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி, மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதாகும்.

    இப்போது 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இதை 2,500 ரூபாயாக உயர்த்துவது குறித்து இன்றைய அமைச்சரவையில் தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    தற்போதுள்ள 1.3 கோடி தகுதியான பெண்களுக்கு இந்த தொகையை முழுமையாக வழங்க வேண்டுமானால், ஆண்டுக்குக் கூடுதலாக சுமார் 39,000 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இந்த நிதியைத் திரட்டுவது எப்படி என்பது குறித்து நிதி அமைச்சர் மேரி வில்சன் தலைமையிலான குழு விரிவான திட்டத்தை முன்வைக்க உள்ளது.

    Advertisement


    பயிர்க்கடன் தள்ளுபடி

    விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரமும் தற்போதைய சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது. 5 ஏக்கர் வரையிலான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆர்பிஐ விதிகளைக் காரணம் காட்டி 50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தவெகவின் கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டத்துடன் இணைத்து, மாநில அரசு தனது பங்காக 9,000 ரூபாயை டாப்-அப் செய்து விவசாயிகளைத் திருப்திப்படுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

    Advertisement

    இன்று அமைச்சரவையில் முக்கிய முடிவு?

    முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, தவெக அரசின் முழுமையான புதிய பட்ஜெட் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, தமிழக அரசின் தற்போதைய உண்மையான நிதி நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ளது.

    இந்த வெள்ளை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பது மற்றும் மும்மொழிக் கொள்கை, மேகதாது அணை விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை இறுதி செய்யவும் இன்றைய அமைச்சரவை கூட்டம் வழிவகுக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேகம் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையே முதலமைச்சர் விஜய் எடுக்கப் போகும் அதிரடி முடிவுகள் இன்று மதியத்திற்குள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்...!!

    English Summary

    When will the Rs 2,500 Magalir Urimai Thogai be released for beneficiaries? CM Vijay to break the suspense in today's high-stakes cabinet meet