மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது உயர்த்தப்படும்? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

  • சென்னை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை. குறிப்பாக மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது பற்றிய அறிவிப்பு இல்லை. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறாதது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிர்மல் குமார் கூறிய பதிலை பார்க்கலாம்.

    Advertisement

    அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    எடப்பாடியும், ஸ்டாலினும் எதுவும் செய்யவில்லை

    நிதி ஆதாரத்தை பெருக்க அதிமுகவும், திமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். மேகதாது விவகாரத்தில் நமது உரிமைகளுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. தமிழக நிதி நிலமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

    மின்சாரம், போக்குவர்த்து கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில்தான் இவர்கள் விட்டு சென்று இருக்கிறார்கள். புதிய ஆதாரத்திற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் என்ன செய்தார். எடப்பாடி எதுவும் செய்யவில்லை. ஸ்டாலினும் எதுவும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதை சீரமைக்கும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். கண்டிப்பாக இது திருத்தப்பட்ட பட்ஜெட்.

    Advertisement

    ஏழை பெண்களுக்கு பயன் அளிக்கும்

    விவசாய கடன் விவகாரத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.. விவசாய கடன்கள் 75 ஆயிரம் ரூபாய் வரை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இருக்கிற நிதி நிலையில், இருக்கிற ஆதாரங்களை வைத்து எவ்வளவு தூரம் மக்களுக்கு பயன் அளிக்க முடியுமோ அதை முதல்வர் செய்துள்ளார். கண்டிப்பாக வரும் காலங்களில் மக்களுக்கான அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும்.

    தங்க மோதிரம். தாலிக்கு தங்க திட்டம் எல்லாம் இருக்கட்டும், இவை எல்லாம் நல்ல திட்டம். ஏழை பெண்களுக்கு பயன் அளிக்க கூடிய திட்டம். அதை மீண்டும் செயல்படுத்தி இருக்கிறோம். முதல்வரை புகழ்ந்து பேசுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இருந்தால் நீக்குவேன் என்று தான் சொன்னார். சபாநாயகர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆட்சேபமான கருத்துகள் இருந்தால் நீக்குகிறேன் என்று சொன்னார்.

    Advertisement

    மகளிர் உரிமைத் தொகை எப்போது?

    ஆட்சேபமான கருத்துகள் எதுவும் இல்லை. அமைச்சர் வினோத் பேசியதில் தவறும் எதுவும் இல்லை. திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். உரிமைகளை மீட்க எல்லா வழிகளையும் செய்வோம்" என்று கூறினார். அப்போது தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான 2,500 உரிமைத்தொகை திட்டம், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்டவை பற்றி அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்த நிர்மல் குமார், "பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஒரு சில திட்டங்களை நிதி ஆதாரத்தை சரி செய்த பிறகு முதல்வர் கண்டிப்பாக அறிவிப்பார். இன்று இருக்கும் சூழலில், இவ்வளவு கடனுக்கு மத்தியில் எப்போது முடியுமோ அப்போது உடனே முதல்வர் செய்வார். ஏனெனில் இதையெல்லாம் பிரதானமாக முதல்வர் ஏற்று கொண்டு இருக்கிறார். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டவை அந்தந்த கால கட்டத்தில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்" என்றார்.

    English Summary

    Magalir urimai thogai: The key announcements expected by the public were missing from the TVK government's first budget. In particular, there was an expectation that the monthly assistance provided to women would be raised to ₹2,500, yet no such announcement was made. Let us look at the response Nirmal Kumar gave regarding this.