சென்னை: சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இருக்கும் இடத்தில் நேற்று முழங்கால் வரை தண்ணீர் இருந்தது, ஆனால் தற்போது அவை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் லாரியின் டயர்கள் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் கூட மழை நீர் வேகமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
மழை என்றாலும் வெயில் என்றாலும் சென்னை மக்கள் அலறும் அளவுக்கு பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு மழைக்கும் சென்னை தத்தளிக்கத்தான் வேண்டுமா என்ற அளவுக்குதான் இருந்து வருகிறது.
இதற்கு காரணம் மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் இருந்ததும், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் இருந்ததும்தான் என்கிறார்கள். மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும், ஆனால் அந்த தண்ணீர் உடனே வடிகாலில் வடிந்துவிட வேண்டும். அதுதான் நல்லதொரு கட்டமைப்பு வசதியாகும். ஒவ்வொரு வடகிழக்கு பருவமழை வரும் போதும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் கிலியுடனேயே இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த முறையும் நேற்றைய தினம் சென்னை, புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என பாரபட்சமில்லாமல் அடி வெளுத்தது. சென்னையின் பாரிமுனை, பிராட்வே, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், முகப்பேர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் கனமழை வெளுத்தது. அது போல் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் இரவோடு இரவாக வந்த மாநகராட்சி ஆணையர் சமீரன், மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து இரவு முழுவதும் பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் சென்னையின் பெரும் பகுதிகளில் இருந்த மழைநீரை வெளியேற்றிவிட்டனர். அதிலும் சுரங்கபாதைகளில் மார்பளவு இருந்த நீரையும் அகற்றிவிட்டனர். இதனால் சென்னை மக்கள் காலை விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால் தண்ணீரே இல்லாத நிலை இருந்தது. அதிலும் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கும் வடபழனி 200 அடி சாலையில் ஒவ்வொரு மழைக்கும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருக்கும். அது போல் அவ்வழியாக செல்லும் லாரிகளின் டயர்கள் பாதி அளவு மூழ்கிதான் இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று காலை மழை நீர் வெளியேற்றப்பட்டு பளபளவென காட்சியளிக்கின்றன. அது போல் ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளிலும் மழை நீர் தேக்கத்தால் பெரும்பாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் பார்த்த வேலையால் அந்த நீர் வடிந்துவிட்டது. சுருக்கமாக சொன்னால் சென்னையின் ஒரே நாள் இரவில் 36 செ.மீ. மழை பெய்தது என சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். இன்றும் சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவும் மாநகராட்சி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிக வேலை இருக்கிறது. சென்னை மாநகராட்சியும் பல்வேறு வடிகால்களில் மக்கள் போட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அப்போதுதான் அந்த கால்வாய்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல முடியும்.விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.. ஆனாலும் காலை சென்னையில் 21 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேங்கவில்லை