500 யூனிட் மின்சாரம், ரூ.10000 மிஸ்ஸிங்.. உழவர் உரிமை அட்டை எங்கே? வேளாண் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி

  • சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் கன்னி வேளாண் பட்ஜெட், விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட மெகா வாக்குறுதிகள் அனைத்தும் இந்த நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    முன்னதாக, நிலமற்ற குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் "உழவர் உரிமை அட்டை" வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆண்டுதோறும் ₹10,000 உதவித்தொகை நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    அதுமட்டுமல்ல, சொந்தமாக நிலம் வைத்துள்ள உழவர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹15,000 விதைப்புக் கால நிதியுதவி, விசைத்தறிக்கூடங்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹3,500 ஆகவும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹4,500 ஆகவும் உயர்த்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    ஆனால், இன்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் நவீனச் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது, ஈரப்பதக் கமிஷன் சுரண்டலைத் தடுப்பது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளுக்கும் தெளிவான தீர்வு கிடைக்கவில்லை.

    Advertisement

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "சுமார் 129 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்குப் பயனுள்ள புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் உழவர் உரிமை அட்டை, ₹10,000 நிதியுதவி, நெல் மற்றும் கரும்பிற்கு ஆதார விலை உயர்வு என இனிக்க இனிக்க வாக்குறுதிகளைக் கொடுத்த தவெக அரசு, இப்போது விவசாயிகளை அப்பட்டமாக ஏமாற்றிவிட்டது.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம் போன்ற திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, பழைய அறிவிப்புகளையே மீண்டும் வாசித்துள்ளது இந்த அரசு" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இந்த கன்னி வேளாண் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது.

    English Summary

    Big Expectations from tvk Government Agriculture Budget: Rs 10,000 for Tenant Farmers, Uzhavar Urimai Card and 500 Units Free Electricity?