தொட்டவனை விடமாட்டேன்னு சொன்ன விஜய் எங்கே? கோடீஸ்வர எம்எல்ஏக்களுக்கும் காஸ்ட்லி கார் தந்தது சரியா

  • சென்னை: "மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்" என்று மேடைகளில் முழக்கமிட்ட முதல்வர் ஜோசப் விஜய், இப்போது அதே மக்களின் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாயை செலவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள், டிரைவர், வாகன பராமரிப்புக்காக மாதம் ரூ.75 ஆயிரம், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் என வாரி வழங்கியிருப்பது பெரும் புயலையே கிளப்பியிருக்கிறது...!!

    Advertisement

    தமிழக அரசியலில் கொள்கை பேச்சுக்களுக்கும், அதிகாரத்திற்கு வந்தபிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை இந்த "எம்எல்ஏ-க்களுக்கான கார் மற்றும் நிதிச் சலுகை" விவகாரம் மீண்டும் இப்போது தோலுரித்து காட்டியுள்ளது.

    Advertisement

    வெள்ளை அறிக்கையும், கார் சலுகையும்

    ஒரு பக்கம், தமிழக அரசின் கஜானா காலியாக இருக்கிறது, சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் மாநிலம் தவிக்கிறது என்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டு விட்டு, நிதி நெருக்கடியை காரணம் காட்டி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளான விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.2500, வருடத்துக்கு 6 இலவச சிலிண்டர், இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, 234 எம்எல்ஏ-க்களுக்கும் காஸ்ட்லி வாகனங்கள் வாங்க மட்டும் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுகிறது.

    Advertisement

    சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தீவிரமாக பணியாற்றவும், சென்னைக்கும் தொகுதிக்கும் இடையே தடையில்லாமல் பயணிக்கவும், பொதுமக்களின் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கவும், முறையான வாகன வசதியும் உதவியாளர்களும் அவசியம் என்பதில் யாருக்குமே இங்கே மாற்றுக் கருத்தில்லை.

    கோடீஸ்வரர்களுக்கும் கார்?

    ஆனால், சபையிலுள்ள 234 எம்எல்ஏக்களில் 190 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளார்கள்.. இவர்கள் ஏற்கனவே சொந்தமாக காஸ்ட்லி வாகனங்களையும் வைத்திருப்பவர்கள்.. தேர்தல் வேட்புமனுவிலேயே தங்களின் பொருளாதார பலத்தை வெளிப்படையாக காட்டியிருப்பவர்களும்கூட... அப்படியிருக்கும்போது கார் இல்லாத எளிய பின்னணி கொண்ட உறுப்பினர்களை மட்டும் கண்டறிந்து வழங்காமல், மொத்த எம்எல்ஏக்களுக்கும் வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்?

    Advertisement

    சொந்த கட்சியினரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதல்வர் விஜய் இப்படி செய்கிறாரோ என்ற சந்தேகமும் இயல்பாகவே எழுகிறது.

    அரசு கஜானாவை பயன்படுத்துவதா

    மற்ற கட்சிகளையெல்லாம் தாறுமாறாக விமர்சித்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கார் கொடுப்பது, ஏழை சாமானியர்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக சொல்லும் கொள்கை முழக்கத்திற்கு கொஞ்சமும் பொருந்தவில்லை.. கார் இல்லாத உறுப்பினர்களுக்கு முதல்வர் தன்னுடைய சொந்த செலவிலோ அல்லது கட்சி நிதியிலிருந்தோ வழங்கியிருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    யாருக்கெல்லாம் கார் இல்லையோ, அந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே, அதுவும் அவர்களின் நிஜமான பொருளாதார நிலையை ஆராய்ந்து சலுகைகளை வழங்கியிருக்க வேண்டும் அல்லது கட்சித் தரப்பில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

    Advertisement

    அதைவிட்டுவிட்டு, தங்கள் வசதிக்காக அரசின் கஜானாவை பயன்படுத்தும் இந்த நடைமுறை, விஜய் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்குப் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

    அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா

    இந்த அறிவிப்பை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதே அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையாகும். அதன்படி, இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்ற அதிருப்தியும், தவெக மீதான விமர்சனங்களும் தணிந்து, தலைவர் விஜய்யின் மீதான நம்பகத்தன்மை காப்பாற்றப்பட்டுவிட்டது என்ற நற்பெயர் பொதுமக்களிடம் நிம்மதியைத் தரும்.

    மாறாக, இந்த அறிவிப்பில் உறுதியாக இருந்து சலுகைகளை தொடர்ந்து வழங்கினால், கொடுத்த வாக்குறுதிகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு மேலும் வலுப்பெற்று, எளிய மக்களுக்காக குரல் கொடுப்பதாக சொன்ன கட்சியின் அடிப்படை சித்தாந்தமே கேள்விக்குறியாகி விடும்.. அத்துடன் மக்களின் அதிருப்தியையும் நிராகரிப்பையும் சந்திக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவை சந்திக்க நேரிடும்.

    Advertisement

    திமுக இப்படி செய்துள்ளதா?

    அதுமட்டுமல்ல, இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.. மற்ற கட்சிகளை தாறுமாறாக விமர்சித்து வரும் தவெகவினர், திமுக ஆட்சியில்கூட எப்போதாவது எம்எல்ஏ-க்களுக்கு இவ்வளவு பெரிய ஆடம்பர சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்களா என்பதை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். ஆளுங்கட்சியாக இருந்தபோதுகூட இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த தயங்கிய நிலையில், தவெக அரசு தனது முதல் கட்டத்திலேயே மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம்?

    எனவே, மக்கள் பணத்தை காப்பேன் என்று சூளுரைத்த முதல்வர் விஜய், மக்களின் வரிப்பணத்தைத் தொட்ட இந்த விவகாரத்தில், தன் கட்சியினர் மீதும் அரசின் இந்த நடவடிக்கை மீதும் என்ன அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போகிறார்?

    சட்டமன்றத்தில் திமுகவை குறை சொல்வதையே "ஆல்டைம்" பணியாக வைத்திருக்கும் விஜய், தனது கட்சியினரின் இந்த சலுகை வேட்கையை கண்டு என்ன பதில் சொல்லப் போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Where Is Vijay Who Said "I Won’t Spare Anyone"? Costly Cars for Crorepati TVK MLAs.. Is This Fair?