சென்னை: தங்களது தலைவரே முதலமைச்சர் விஜய் குடும்பத்தை பற்றிப் பேசும்போது, தாங்களும் அவரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற தவறான துணிச்சல் முன்னாள் அமைச்சர்களுக்கு வந்துவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியோ தங்களது கட்சியினருக்கு, "முதலமைச்சரை ஒருமையில் பேசக் கூடாது" என்று ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
The Gentle Man சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, உயரிய அதிகாரமும், மாண்பும் கொண்ட பதவிகளில் இருப்பவர்களை விமர்சிப்பதற்கும் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதற்கும் சட்டம் தாராளமாக இடமளிக்கிறது. ஆனால் அவர்களை ஒருமையில் இழிவுபடுத்துவதும், தனிப்பட்ட முறையில் அவதூறுகளை பரப்புவதும் சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யை மேடைகளில் ஒருமையில் இழிவாக பேசியதற்காக, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கை இப்போது அரசியல் சூழலில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு நபர் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ஒரு நடிகராகவோ அல்லது சாதாரண அரசியல்வாதியாகவோ இருக்கும் காலகட்டத்தில் அவரை விமர்சிப்பதும், ஒருமையில் பேசுவதும் பொதுவெளியில் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவர் அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அந்தத் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, அவர் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டியது ஒட்டுமொத்த குடிமக்களின் கடமையாகும். கடந்த காலங்களில் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பலரால் ஒருமையில் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர் 1991-ல் முதலமைச்சராக அரியணை ஏறிய பிறகு, அந்தப் பதவியின் அதிகாரம் மற்றும் சட்டதிட்டங்களின் காரணமாக அவரை ஒருமையில் பேசியவர்கள் கூட தங்களை மாற்றிக்கொண்டு, "அம்மையார்" என்றும் "செல்வி ஜெயலலிதா அவர்களே" என்றும் மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினர். அது போன்றதொரு நாகரிக அரசியல் சூழல் தற்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து, முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றுள்ளார்.. ஆனால் திமுகவை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் முன்னாள் அமைச்சர்களும் தொடர்ந்து அவரை "அவன், இவன்" என ஒருமையில் பேசி வருகிறார்கள்.. ஆர்.எஸ்.பாரதி, தாமோ அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் பொது மேடைகளில் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே முன்னாள் அமைச்சர்கள் பொதுவெளியில் இழிவாகப் பேசும்போது, அது சாமானிய மக்களிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்குகிறது. முதலமைச்சருக்கே உரிய அதிகாரமும் பாதுகாப்பும் இல்லை என்ற எண்ணம் மக்களிடம் தோன்றிவிட்டால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்படும்... இந்த சமுதாய பாதிப்பை தடுப்பதற்காகவே சட்டம் தன் கடமையை செய்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது இத்தகைய கடுமையான கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அமைச்சர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. முதலமைச்சரின் குடும்பத்தை இழுத்து, தங்கை சங்கீதாவைக் குறிப்பிட்டு, "பூந்தமல்லி கோர்ட்டில் உங்களைத் தேடுகிறார்கள்" என்று விஜய்யைச் சுட்டிக்காட்டிப் பேசியதுதான் இந்த அவதூறுகளுக்கு துவக்கம். எதிர்க்கட்சித் தலைவரே முதலமைச்சருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசும்போது, நாமும் ஏன் 'அவன் இவன்' என்று பேசக்கூடாது என்ற தைரியம் முன்னாள் அமைச்சர்களுக்கு வந்துவிட்டது. சட்டசபையில் ஒரு பிரச்சனை நடந்தால், அதை அங்கேயே முடியுங்கள், யாராக இருந்தாலும் சரி. 'நான் சட்டசபையில் கேள்வி கேட்டால், நீங்கள் அந்த கேள்விக்கு வீட்டிற்குச் சென்று பதில் எழுதித் தருகிறீர்கள்' என்று சொன்னீர்களே, சட்டசபையில் பேசிய ஒரு குற்றச்சாட்டுக்கோ அல்லது பேசிய ஒரு வார்த்தைக்கோ, நீங்கள் வெளியே வந்து குடும்பத்தைப் பற்றிப் பேசலாமா? அது எப்படிச் சரியாகும்? அது முற்றிலும் தவறு. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியோ தங்களது கட்சியினருக்கு, "முதலமைச்சரை ஒருமையில் பேசக் கூடாது" என்று ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல், இத்தகைய இழிவான பேச்சுகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அரசியல் களத்தில் மாற்றுக் கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் வைப்பதற்கு சொல்முறை என்று ஒன்று உள்ளது. அதை விட்டுவிட்டு, அதிகாரத்தில் உள்ள உயரிய ஆளுமைகளை வன்மத்துடன் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பையே பலவீனப்படுத்தும். கடந்த ஆட்சியில் முதலமைச்சரை முட்டாள் என்று விமர்சித்த ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் மீதும் அன்றைக்கே சட்டம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இத்தகைய கைது நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே, எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் நாட்டின் உயரிய சாசனப் பதவிகளையும், அதன் மாண்புகளையும் அசிங்கப்படுத்தத் துணிய மாட்டார்கள் என்ற எச்சரிக்கைதான், தற்போதைய அரசியல் உலகிற்கு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான இந்தச் சட்டப்பூர்வமான கைது நடவடிக்கை முற்றிலும் சரியானதே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.அனிதா ராதாகிருஷ்ணன் கைது
ஒருமைப் பேச்சு - சமுதாய பாதிப்பு
ஆர்.எஸ்.பாரதி, அனிதா ராதாகிருஷ்ணன்
பிள்ளையார் சுழி போட்ட உதயநிதி ஸ்டாலின்
தங்கை சங்கீதா
முட்டாள் முதலமைச்சர்