மேயர் பக்கத்தில் யார் உட்காரணும்? கவுன்சிலர்கள் எங்கே அமரணும்? தமிழக அரசு போட்ட புது ரூல்ஸ்

  • சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் மேயர் எங்கே உட்காரணும், ஆணையருக்கு எந்த இடம், கவுன்சிலர்கள் எப்படி அமர வேண்டும் என்பதில் இனி குழப்பம் இருக்காது.. இதற்காகவே தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இப்போது வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னென்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்...!!

    Advertisement

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் மன்றக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் பங்கேற்பார்கள்.

    Advertisement

    மாநகராட்சி கூட்டங்கள்

    இந்த கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகள், வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    ஆனால், கூட்ட அரங்கில் யார் எங்கே அமர வேண்டும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த இடத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எப்படியான வசதிகள் செய்து தர வேண்டும் என்பதில் ஒரே மாதிரியான நடைமுறை இல்லாததால் குழப்பங்கள் ஏற்படும் சூழல் நிலவியது.

    மேயர், துணைத் தலைவர்

    குறிப்பாக, மேயர் அல்லது நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஆணையர், கவுன்சிலர்கள் என ஒவ்வொருவருக்கும் இருக்கைகள் ஒதுக்குவதில் தெளிவான வழிகாட்டுதல் தேவைப்பட்டது. இதனால் மன்றக் கூட்டங்களை ஒழுங்காக நடத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

    Advertisement

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மன்றக் கூட்ட அரங்கின் மையத்தில் உள்ள மேடையில் மேயர் அல்லது நகர்மன்ற மற்றும் பேரூராட்சித் தலைவர் அமர வேண்டும். அவருக்கு இடதுபுறம் துணை மேயர் அல்லது துணைத் தலைவரும், வலதுபுறம் மாநகராட்சி ஆணையர் அல்லது நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலரும் அமர வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு.. நீதிபதிகளிடம் சொன்ன காரணத்தை பாருங்க!

    உள்ளாட்சி அமைப்புகள்

    கூட்டத்தில் பங்கேற்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏதுவாக மன்றக் கூடத்தில் முதன்மையான இடத்தில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். மேடைக்கு எதிரே உள்ள வரிசைகளில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் அமர வேண்டும். இவர்கள் வார்டு எண்களின் அடிப்படையில் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ அமர வைக்கப்பட வேண்டும்.

    Advertisement

    உள்ளாட்சி அமைப்புகளின் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்திகளை சேகரிக்க வரும் உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மன்ற நடவடிக்கைகளை கவனிக்கும் வகையில் போதுமான இடவசதி செய்து தரப்பட வேண்டும். தலைவரின் முன் அனுமதி பெற்ற பார்வையாளர்கள் அவையின் மாண்பைக் காக்கும் வகையில், உறுப்பினர்களின் இருக்கைகளுக்குப் பின்னால் அரங்கின் வசதிக்கேற்ப அமர அனுமதிக்கப்படலாம்.

    அவ்வளவு சொல்லியும் கேட்காத பாஜக! கடைசியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!

    தமிழக அரசு புதிய ரூல்ஸ்

    இந்த நெறிமுறைகளை உடனடியாக அனைத்து மாநகராட்சிகள், அதாவது சென்னை தவிர்த்து, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் உரிய தெளிவுரைகளுடன் உடனடியாகச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்படக்கூடிய குழப்பங்களைக் குறைத்து, கூட்டங்களை ஒழுங்காக நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!

    English Summary

    Where Should the Mayor Sit? Do You Know Tamil Nadu Government’s New Rules for Councillors and Officials?