ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. இன்று முதல் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு.. எங்கே கிடைக்கும் தெரியுமா?

  • சென்னை: தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான 10 வகையான காய்கறிகளை ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு வாங்கலாம். "வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த சலுகை விற்பனை, இன்றைய தினம் தொடங்குகிறது. இந்த தொகுப்பில் என்னென்ன காய்கறிகள் கிடைக்கும், எங்கே வாங்கலாம், எத்தனை நாட்களுக்கு விற்பனை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம்.

    Advertisement

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை ஆரம்பமாகிறது.. வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்தத் தொகுப்பு இன்று நவம்பர் 5ம் தேதி முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும். 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 3 நாட்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது.

    Advertisement

    வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு

    தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வாங்க வேண்டும் என்பதற்காகவே கூட்டுறவுத்துறை இப்படியொரு ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்காக நேற்று முன்தினம் கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது.

    இதன்படி, 10 வகையான காய்கறிகள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்களில் இந்தத் தொகுப்புகள் கிடைக்கும். சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்பட உள்ளன.

    Advertisement

    3 நாட்கள் மட்டுமே விற்பனை

    இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை இன்று தொடங்கி நவம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது, இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையைப் பயன்படுத்தி காய்கறிகளை வாங்க முடியும். எனவே, இந்தத் தொகுப்பை வாங்க விரும்புபவர்கள் இந்த 3 நாட்களுக்குள் அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்குச் செல்லலாம்.

    10 வகை காய்கறிகள் என்னென்ன?

    இந்த தொகுப்பில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் முக்கியமான 10 வகையான காய்கறிகள் இடம்பெறுகின்றன. அதன்படி, அரைக்கிலோ பெரிய வெங்காயம், அரைக்கிலோ தக்காளி, கால் கிலோ கத்தரிக்காய், கால் கிலோ உருளைக்கிழங்கு, தலா 200 கிராம் கேரட் மற்றும் பீன்ஸ் வழங்கப்பட உள்ளன. இதனுடன் 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள தேங்காயும் இடம்பெறும்.

    Advertisement

    ஆக, சமையலுக்குத் தேவையான வெங்காயம், தக்காளி தொடங்கி தேங்காய், இஞ்சி, எலுமிச்சை வரை 10 வகையான பொருட்களும் ஒரே தொகுப்பில் கிடைக்க உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக, இந்த தொகுப்பை ரூ.100 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

    ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே

    இந்த விற்பனையில் சில கட்டுப்பாடுகளையும் கூட்டுறவுத்துறை விதித்துள்ளது. அதன்படி, ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். மேலும், ஒரு தொகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.100 மட்டுமே பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும். இதைவிடக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பணம் வசூலிக்கக் கூடாது என்று விற்பனை நிலையப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலையை உரிய குழு நிர்ணயிக்கும். காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான விலை மட்டுமல்லாமல், அவற்றை தொகுப்பாக வழங்குவதற்கான செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

    பை-க்கான செலவு எவ்வளவு?

    குறிப்பாக, ஒவ்வொரு தொகுப்புக்கும் சுற்றுச்சூழலுக்கேற்ற பை-க்கான செலவாக ரூ.2.50 கணக்கிடப்பட்டுள்ளது. காய்கறிகளின் கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 போன்றவற்றை கணக்கிட்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஒரு தொகுப்பின் விலை ரூ.100 மட்டுமே என்பதுதான். பைக்கான செலவு உள்ளிட்ட கணக்கீடுகள் தனியாக இருந்தாலும், விற்பனை நிலையங்களில் பொதுமக்களிடம் ரூ.100-க்கு மேல் வசூலிக்கக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அதனால் தீபாவளிக்கு தேவையான காய்கறிகளை சலுகை விலையில் வாங்க விரும்புபவர்கள் இன்று நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.!!!

    English Summary

    Where to Get 10 Vegetables for Rs. 100? Tamil Nadu's Vetri Special Vegetable Pack Starts today