கல்தா கொடுத்த காங்க்., ஆணி அடித்த மாதிரி அண்ணியார்! திமுகவுடன் இன்னும் நிற்கும் கட்சிகள் யார்? யார்?

  • சென்னை: தமிழக அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது, திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது தான். உண்மையை சொல்லப் போனால் அப்படி நடக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல கட்சிகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிய நிலையில், இன்னும் சில கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியிலேயே இருந்து வருகின்றன. இந்த சூழலில், திமுக கூட்டணியில் இன்னும் யார் இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் விலகவில்லை? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக எழுந்துள்ளது.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.

    Advertisement

    ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை முழுவதுமாக மாற்றின. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி ஆதரவு அவசியமான சூழல் ஏற்பட்டது.

    திமுக கூட்டணி

    இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் முதலில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பின்னர் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. இதில் முக்கியமான திருப்பமாக, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை இடமும் வழங்கப்பட்டது. சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றது அரசியல் ரீதியாக பெரிய கவனத்தை ஈர்த்தது. அதேபோல் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் ஆட்சியில் பங்குபெற்றன.

    Advertisement

    தவெக அரசு

    ஆனால் இந்த மாற்றங்களுக்குப் பிறகும் சில கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை. அதில் முதன்மையானது தேமுதிக. தேர்தலுக்கு முன்பாகவே திமுக, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியிருந்தது. மேலும் தேர்தலிலும் தனித்த அடையாளத்துடன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேமுதிக உள்ளது என்று கூறப்படுகிறது.

    பிரேமலதா விஜயகாந்த்

    இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகவே, திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என்று அறிவித்தார். இதனால் தேமுதிக தற்போது திமுக அணியில் உறுதியாக இருக்கும் கட்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் இன்னும் திமுக அணியிலேயே உள்ளன. ஆனால் இதற்கான முக்கிய காரணம் கூட்டணி மட்டும் அல்ல.. சட்ட ரீதியான சிக்கலும் காரணமாக கூறப்படுகிறது.

    Advertisement

    திமுக எம்.எல்.ஏ

    இந்தக் கட்சிகளில் பலர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அவர்கள் சட்ட ரீதியாக திமுக எம்.எல்.ஏக்களாகவே கருதப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், திமுக கொறடா உத்தரவை மீறி வேறு அணிக்கு ஆதரவு தெரிவித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால், இந்தக் கட்சிகள் உடனடியாக தவெக அணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ்

    அரசியல் ரீதியாக சில கட்சிகளுக்கு தவெக அணியுடன் நெருக்கம் இருந்தாலும், சட்டப் பிரச்சனைகள் காரணமாக அவர்கள் அமைதியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திமுகவுக்குள் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிறகு திமுக தலைமைக்கு மரியாதை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூட காங்கிரஸை கடுமையாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    கனிமொழி

    மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியதாக வெளியான தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. யாருடனும் கூட்டணி இல்லாமல் திமுக தனியாக வெற்றி பெறும் வகையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்து, திமுகவுக்குள் வலுத்து வருகிறது. அதேநேரத்தில், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதை விமர்சித்து திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதனை நீக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

    தமிழக அரசியல்

    இந்த பரபரப்பான சூழலில், தற்போது திமுக கூட்டணியில் நீடித்து வரும் கட்சிகள் எதிர்காலத்தில் எந்த முடிவை எடுக்கும் என்பது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கணக்குகள் மீண்டும் மாற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான கால கட்டமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    After several allies backed TVK government, only a few parties continue with DMK alliance in Tamil Nadu politics.