எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிச்சது இருக்கட்டும்! எந்த மாநிலத்தில் அதிக சம்பளம்? எங்கே குறைவு தெரியுமா?

  • சென்னை: இந்தியாவில் எந்த மாநிலத்தில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?, எந்த மாநிலத்தில் குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. கஜானா காலி என்று அறிவித்துவிட்டு கார் வழங்குவதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    Advertisement

    எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் தமிழக அரசு

    கார் பராமரிப்புக்கு செலவுக்கு ரூ. 75 ஆயிரம், உதவியாளர் வைத்துக்கொள்ள ரூ. 25 ஆயிரம் என சலுகைகளை கொட்டி கொடுத்துள்ளார் விஜய். இதன் மூலம் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக சலுகை கிடைக்க உள்ளது. கார்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, நம் நாட்டில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் மாநிலம் எது, குறைந்த சம்பளம் வழங்கும் மாநிலம் எது என்ற விவரங்களை பார்க்கலாம்.

    அதிக சம்பளம் கொடுக்கும் மாநிலம்

    கடந்த 2025 ஆம் ஆண்டு The Tribune- வெளியிட்ட தகவலின் படி அதிக சம்பளம் பெறும் மாநிநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏவுக்கு வழங்கப்படும் சம்பளம் ரூ.2.75 லட்சம் ஆகும். தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ், எம்.எல்.ஏக்களுக்கு இந்த அளவு சம்பளத்தை உயர்த்தி வழங்கினார். சலுகைகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் சம்பளம் இதுவாகும்.

    Advertisement

    குறைவான சம்பளம் கொடுக்கும் மாநிலம்

    எம்.எல்.ஏக்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கும் மாநிலம் நமது அண்டை மாநிலமான கேரளாதான். இங்கு ஒரு எம்.எல்.ஏவுக்கு மாத சம்பளமாக ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் நிலையான அலவன்ஸ் ஆக 2 ஆயிரம் ரூபாய், தொகுதி அலவன்ஸ் ஆக 25 ஆயிரம் ரூபாய், போக்குவ்ரத்து படியாக ரூ.20,000- , டெலிபோன் பில்களுக்கான அலவன்ஸ் ஆக 11.000, தகவல் படியாக ரூ.4,000-ம் இதர செலவுகளுக்கான படி ரூ.8 ஆயிரமும் அடங்கும். மாநிலத்திற்குள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000-ம், கேரளாவிற்கு வெளியே செல்லும் பயணங்களுக்கு ரூ. 1,200-ம் தினப்படியாகப் பெறும் உரிமையும் கேரள எம்.எல்.ஏக்களுக்கு உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் எப்படி?

    தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளமாக ரூ.1,05,000-வழங்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏக்களுக்கு மாதம் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு இருந்தது. 2017-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி அறிவித்தார். அந்த சம்பளமே தற்போது வரை எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தற்போது கூடுதலாக முதல்வர் விஜய் சலுகையும் அறிவித்துள்ளார்.

    எம்பிக்களுக்கு எவ்வளவு?

    நாடாளுமன்ற எம்பிக்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. தொகுதி படியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஸ்டேஷனரி செலவுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உள்பட அலுவலக செலவுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றம் நடக்கும் நாட்களில் தினமும் ரூ.2 ஆயிரம் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டால் மட்டுமே இந்த படி கிடைக்கும்.

    Advertisement

    எம்பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒன்றும் வழங்கப்படும். முதல் முறையாக எம்பியானால் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும், சீனியர் எம்பி என்றால் தனி பங்களாவும் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடுகளில் 2 லேண்ட்லைன், ஒரு செல்போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இணையதள வசதி எம்பிக்களுக்கு வழங்கப்படும்.

    English Summary

    Here, we look at which state in India pays the highest salary to MLAs, and which state pays the lowest salary. The announcement made by Tamil Nadu Chief Minister Vijay regarding the provision of cars to MLAs has been a subject of intense debate over the past few days.