விஜய்யை கையில் வைத்திருக்கும்.. ரெட்டி க்ரூப்! உதயநிதி சரவெடி! யார் இந்த சுஜய், விஷ்ணு, அனில்?

  • சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. முதல்வர் விஜய் தனது 45 நிமிட உரையில் பழைய விவகாரங்களையும், அமலாக்கத்துறை குறிப்புகளையும் பேசிவிட்டு, எதிர்க்கட்சி எழுப்பிய 15 கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியது.

    Advertisement

    முக்கியமாக பேசுவதை எல்லாம் பேசிவிட்டு எதிர்கட்சிகளை பேச விடாமல்.. மாஸ் காட்டியதாக விஜய் செயல்பட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    Advertisement

    விஜய் பேச்சுக்கு பதில் அளிக்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால், திமுக எம்எல்ஏக்கள் அவையில் தர்ணாவில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் கனிமவளத் துறையை மூன்று தனிநபர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறி பெரும் புயலைக் கிளப்பியுள்ளார்.

    உதயநிதி வைத்த நேரடி குற்றச்சாட்டு

    செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி என மூவரும் சேர்ந்து கொண்டு அரசு நடத்தும் கனிமவளங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சமீபத்தில் கூட சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விஷ்ணு ரெட்டிக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். இதிலிருந்தே யார் ஆட்சியை ஆட்டுகிறார் என்பது தெளிவாகிறது. இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன்,

    Advertisement

    மேலும், விஜய் மீது வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறிய உதயநிதி, தவெக அரசு தனது பலத்தை நிரூபிக்க குதிரை பேரங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

    யார் இந்த 3 ரெட்டி? இவர்களின் பின்னணி என்ன?

    உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட அந்த மூன்று நபர்கள் யார், அவர்களுக்கு முதல்வருடன் என்ன தொடர்பு என்ற விவரங்கள் இதோ:

    1. விஷ்ணு ரெட்டி (விஷ்ணு ரெட்டி எர்ரதொட்டி):

    ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர். கல்லூரி காலத்திலிருந்தே விஜய்யின் மிக நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியபோது அதன் களப் பணிகள், மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் சமூக வலைதள வியூகங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் முதல்வர் விஜய்யின் பொது நிகழ்வுகள் மற்றும் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் தினசரி திட்டங்கள், மக்கள் சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை இவரே ஒருங்கிணைத்து வருகிறார்.

    Advertisement

    2. சுஜய் ரெட்டி:

    இவர் விஷ்ணு ரெட்டியின் நெருங்கிய உறவினர் (மச்சான்). இவர் கார்ப்பரேட் நிறுவனப் பதிவுகளின்படி, விஷ்ணு ரெட்டியுடன் இணைந்து பல்வேறு சுரங்கம், நிலக்கரி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தப் பணிகளை நடத்தும் நிறுவனங்களில் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கள அளவில் தொழில்களைக் கவனித்துக் கொள்ளும் நபராக இவர் பார்க்கப்படுகிறார்.

    3. ஒய்.எஸ். அனில் ரெட்டி

    ஆந்திராவின் செல்வாக்கு மிக்க ஒய்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்.. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரர் உறவு கொண்டவர். சென்னையில் பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருகிறார். சென்னையில் உள்ள 'இண்டோ ராக்ஸ் எல்.எல்.பி' என்ற கனிமவள மற்றும் சுரங்க நிறுவனத்தில் விஷ்ணு ரெட்டியும் அனில் ரெட்டியும் பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள்.

    Advertisement

    ரெய்டுகளும், நிலுவையில் உள்ள வழக்குகளும்

    இந்த மூவரில் அனில் ரெட்டியின் நிறுவனங்கள் மற்றும் குடும்பத்தினர் மீது ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

    ஆந்திராவில் நடைபெற்ற மணல் மற்றும் மதுபான முறைகேடுகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு சிஐடி மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் இவரது பெயரும் அடிபட்டது.

    போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்பட்டு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இடங்களில் மத்திய அமைப்புகள் முன்னர் சோதனைகளை நடத்தின.

    விஷ்ணு ரெட்டியைப் பொறுத்தவரை, அரசு ஆலோசகர் என்ற பெயரில் அமைச்சரவைக் கூட்டங்களிலும் தலைமைச் செயலக நிர்வாகத்திலும் விதிகளுக்குப் புறம்பாகத் தலையிடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.பி. பி.வில்சன் ஆகியோர் காவல் துறையில் முன்னரே புகார் அளித்திருந்தனர்.

    Advertisement

    இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?

    தற்போது விஷ்ணு ரெட்டி, முதலமைச்சர் அலுவலகத்தின் மிக முக்கியமான அதிகார மையமாகச் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், மக்கள் கோரிக்கைகள் என அனைத்தையும் அரசு விதிகளின்படியே அவர் கவனித்து வருவதாக ஆளும் தவெக தரப்பு விளக்குகிறது. சுஜய் ரெட்டியும் அனில் ரெட்டியும் தங்கள் சுரங்க மற்றும் தொழில் கூட்டமைப்புகளைத் தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர்.

    ஒருபுறம் ஊழலற்ற ஆட்சி என்று விஜய் பேச, மறுபுறம் முதலமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் அரசு கனிமங்களை வளைத்துப் போடுவதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உதயநிதி விரைவில் ஆதாரங்களை வெளியிடுவதாகக் கூறியுள்ளதால், இந்த '3 ரெட்டி' விவகாரம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த சூறாவளியைக் கிளப்பியுள்ளது.

    English Summary

    Who Are the '3 Reddys' Named by Udhayanidhi? Background and Vijay Connection Explained